விமர்சனம் : ‘ஸ்டார் ‘!

சினிமா

தற்கால சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு விஷயங்களைப் பொருத்து அமைந்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது படத்தின் டிரெய்லர்.

ஒரு படத்தின் டிரெய்லர் தரமாக அமைந்து மக்களிடத்தில் சேர்ந்துவிட்டால் அதுவே பாதி வெற்றியை அப்படத்திற்கு தந்து விடுகிறது. அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டுகளில் வெளியான பல திரைப்படங்களை குறிப்பிடலாம்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘ ஸ்டார் ‘ படத்தின் டிரெய்லர் மிகத் தரமாக உருவாக்கப்பட்டிருந்தது. மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இன்று( மே 10) வெளியாகியுள்ள ‘ஸ்டார் ‘ படத்திற்கு ஏகோபித்த ஓப்பனிங் கிடைத்துள்ளது.

ஒன்லைன்

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் சினிமாவில் பெரிய ‘ ஸ்டார் ‘ ஆக வேண்டும் என நினைக்கிறான். அவனது சினிமா கனவில் அவன் கற்ற வாழ்க்கை பாடங்கள், சந்தித்த மனிதர்கள், வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள், கடைசியில் கனவு நிறைவேறியதா? என்பதே ‘ ஸ்டார் ‘ படத்தின் ஒன்லைன்.

அனுபவ பகிர்தல்

இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘ஸ்டார் ‘ திரைப்படம் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகிறது.

1) ஒரு சாதாரண இளைஞனின் அசாதாரண கனவு என்கிற கதைக் கரு நமக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் நேர்த்தியான திரைக்கதையில் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், நாயகன் பாத்திரத்துடன் நம்மையே பொருத்திக்கொள்ளும் வகையிலும் இருந்தது.

2) யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தோடு ஒட்டி இருந்தது படத்தின் முக்கிய பலம். அதிலும் அவரது புகழ்பெற்ற பாடல் ஒன்றை இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கும் இடம் மிகச் சிறப்பான தியேட்டர் அனுபவமாக இருந்தது.

3) சினிமா கனவு உள்ள ஒரு இளைஞனைப் பற்றிய கதை என்றாலும், ‘ கனவு ‘ என்கிற பொதுவான ஒரு மையக் கருவைக் கொண்டே இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் இளன். ஆக, எவ்வித கனவு கொண்ட எவரும் இந்தப் படத்தோடு தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

4) கூடுமான அளவிற்கு குறைந்தபட்ச நியாயத்துடன் எழுதப்பட்ட இந்தப் படத்தின் கதாநாயகிகளின் கதாபாத்திர வடிவமைப்பு பாராட்ட வேண்டிய ஒன்று.

5) ஒளிப்பதிவாளர் எழில் அரசுவின் ஃப்ரேம்கள் அனைத்தும் அற்புதம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் நீளமான ஷாட் மிகச் சிறப்பான திரை அனுபவம்.

6) ஹீரோவின் நண்பராக வரும் ‘ குலாபி ‘ , அசரீரி குரலாக மட்டுமே வந்து போகும் ‘ அப்பத்தா ‘ , ஹீரோவை டெஸ்ட் செய்யும் ஹீரோயின் பாட்டி என பிற சில கதாபாத்திர வடிவமைப்புகளும் ரசிக்கும் படி எழுதப்பட்டு இருந்தது.

7) தமிழ் சினிமாவின் ஒரு புகழ்பெற்ற இயக்குநர் இந்தப் படத்தில் கௌரவ தோற்றம் அளித்துள்ளார். அவர் ஸ்க்ரீனில் வரும் அந்த சீன் சிறப்பான தியேட்டர் மொமெண்ட்.

8) சோர்வடையும் தருணங்களில் சில திரைப்படங்கள் நமக்கு நம்பிக்கையைத் தரும். அத்தகைய நம்பிக்கையை இந்தத் திரைப்படம் பலருக்கும் தரக் கூடும்.

விரிவான விமர்சனம் 

‘ முகவரி ‘ , ‘ ஜெர்சி ‘ , ‘ வாரணம் ஆயிரம் ‘ போன்ற இதே ஜானரில் வெளியான பல படங்களின் சாயல் இந்த ‘ ஸ்டார் ‘ படத்தைப் பார்க்கும் போது நமக்கு நினைவிற்கு வந்தாலும் புதுமையான திரைக்கதை, ஸ்டேஜிங், கதாப்பாத்திர வடிவமைப்புகள் மூலம் நம்மை ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் இளன்.

குறிப்பாக , வழக்கம் போல் வரும் சில காட்சிகளில் அவர் செய்துள்ள சில புதுமைகள் அந்த வழக்கமான காட்சியை கொஞ்சம் மறக்கடிக்க செய்கிறது. மேலே குறிப்பிட்டது போல், சில துணை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள், அவை எழுதப்பட்டிருக்கும் விதம் மிகச் சிறப்பு.

இந்தப் படத்தின் ஜானருக்கு ஏற்ற எழில் அரசுவின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக உள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் வரும் நீளமான ஷாட், இரண்டாம் பாதியில் வரும் ஒரு மாற்றத்திற்கு ஏற்ற லைட்டிங், முதல் பாதியில் இருக்கும் சில பளிச்சிடும் காட்சிகள் என சிறப்பாக கையாண்டுள்ளார் எழில் அரசு. யுவன் சங்கர் ராஜாவின் இசை , மீண்டும் ஒரு முறை ‘ யுவன் இஸ் பேக் ‘ என சொல்ல வைக்கிறது. அண்ணாமலை படத்தில் மனோரமா சொல்வது போல் ‘ நம்ம அண்ணாமலை மாறல! ‘

தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட ஹீரோக்களாக உருவாகியிருக்கும் கவின் – மணிகண்டன் என இருவரும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியான மாஸ் – கிளாஸ் என இருவரும் பிரியாமல், அவர்களுக்கு பொருத்தமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருவது ஆரோக்கியமான ஒன்று. ‘ லிஃப்ட் ‘ , ‘ டாடா ‘ என்கிற வரிசையில் இந்தப் படத்தில் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் கவின்.

ஸ்கூல் பையன் முதல் ஃபேமிலி மேன் வரை நீளும் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டுள்ளார் கவின். இவ்வளவு சீக்கிரம் இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களை கவின் ஏற்று நடிப்பது பாராட்டுக்குரியது.

எமோஷனல் காட்சிகள், காதல் காட்சிகள் என காட்சிக்கேற்ப கதாபாத்திரத்தை புரிந்து பாவித்துள்ளார் கவின். துணை கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக மலையாள நடிகர் லால் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை கூடுதல் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், அதில் லேசாக தென்படும் அவரது மலையாள வாடை தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

பிரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் என இரு ஹீரோயின் கதாபாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும் அதிதியின் டப்பிங் பிரச்சனை பல்லைக் காட்டுகிறது. ஒரு சாவு வீட்டில் நடக்கும் நகைச்சுவை காட்சி, அப்பத்தா என்கிற கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அப்பத்தாவின் தோடு இடம்பெறும் ஒரு காட்சி, கவினின் நண்பனை வழியனுப்பும் ஒரு காட்சி, கேம்பஸ் இன்டர்வியூ காட்சி என பல காட்சிகள் நன்றாகவே ரசிக்க முடிந்தது.

முன்னதாக சொன்னது போல் இது வெறும் சினிமாவைப் பற்றிய கதையாக அணுகாமல் இருந்த முறை புதிதாக இருந்தாலும், அந்த அணுகுமுறையே ஹீரோவின் நோக்கத்தை இன்னும் தெளிவாக கூறியிருக்கலாம் என எண்ணத் தூண்டியது. சினிமா ஆடிசன், அதனின் அரசியல், ஹீரோ எந்த அளவிற்கு தயாராகிறான் போன்ற விஷயங்கள் இன்னும் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்கலாம்.

அப்படி சொல்லப் பட்டிருந்தால் இந்தக் கதையின் முடிவு இன்னும் சிறப்பாக, எதார்த்ததுக்கு இன்னும் நெருக்கமாக இருந்திருக்கக் கூடும். மற்றபடி இரண்டாம் பாதியில் வரும் சிறிய தொய்வு போன்ற விஷயங்களை  தவிர்த்தால் இந்த ‘ ஸ்டார் ‘ மிகச் சிறப்பான படமாக இருந்திருக்கும். இருந்தாலும் நிச்சயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் தான் ‘ ஸ்டார் ‘ .

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

அதிர்ச்சி திருதியை ஆன அட்சய திருதியை: ஹாட்ரிக் அடித்த தங்கம் விலை!

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… இந்தியா கூட்டணிக்கு பலம்… மம்தா நம்பிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *