விமர்சனம் : ஊரு பேரு பைரவகோனா!

Published On:

| By christopher

பேண்டஸி கதையில் ஒரு காதல் அத்தியாயம்!

பேண்டஸி படம் பார்ப்பதென்பது பெரியவர்களைக் குழந்தைகளாக மாற்றும். குழந்தைகளைப் பெரியோராக உணரச் செய்யும். யதார்த்தம் சிறிதுமற்ற கற்பனை உலகத்துக்குள் அதுவரை காணாத மாயங்களைக் காணச் செய்யும். ஆனால், பேண்டஸி படங்கள் தரும் அந்த அனுபவங்களைத் திறம்படத் தந்த இயக்குனர்கள் மிகக்குறைவு. ‘அப்புச்சி கிராமம்’ படம் வழியே தமிழில் அறிமுகமான வி.ஆனந்த், தெலுங்கில் ‘ஒக்க ஷனம்’, ‘டிஸ்கோ ராஜா’ உட்பட வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படங்களைத் தந்து வருகிறார். கனகச்சிதமான திரைக்கதை அமையாமல் அவை பெரியளவில் கவனிக்கப்படாமல் போயின. அப்படிப்பட்டவர் ‘பேண்டஸி’ வகைமையில் தற்போது தந்திருக்கும் படமே ‘ஊரு பேரு பைரவகோனா’.

இந்த படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை வழங்குகிறது?

Ooru Peru Bhairavakona Telugu Movie Review | Sundeep Kishan

மாய கிராமம்!

சினிமா ஸ்டண்ட்மேனான பசவலிங்கம் (சந்தீப் கிஷன்) ஒரு கல்யாண வீட்டுக்குள் புகுந்து நகைகளைத் திருடுகிறார். ஆனால், அங்குள்ளவர்கள் அவரை ஒரு அறையில் பூட்டிவைத்து விடுகின்றனர். இது குறித்து மணப்பெண் போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார்.

போலீசார் வரும் முன்னரே அந்த அறையை உடைத்துவிட்டு வெளியே வருகிறார் பசவா. அங்கிருப்பவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துப் போகிறார். நண்பர் ஜான் (ஹர்ஷா) ஒரு காரில் அவரை அழைத்துச் செல்கிறார்.

அப்போது, பசவாவுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதன் மூலமாக, தனது காதலியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவர் அந்த நகைகளைத் திருடியது தெரிய வருகிறது.

செல்லும் வழியில், சாலையில் ஒரு இளம்பெண் அடிபட்டுக் கிடப்பதைப் பார்க்கின்றனர் இருவரும். அவரது பெயர் கீதா (காவ்யா தாபர்). மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டுப் போகலாம் என்று காரைத் திருப்புகின்றனர். உண்மையில், கீதா ஒரு திருட்டுப் பேர்வழி. அடிபடுவது போல நடித்து அவர்களை ஏமாற்றுவதுதான் அவரது திட்டம்.

செக்போஸ்டில் போலீசார் பசவாவைப் பிடிக்க முயற்சிக்க, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பைரவகோனா எனும் ஊருக்குள் அவர் காரைத் திருப்புகிறார். அந்த ஊரே விழாக் கொண்டாட்டத்துடன் இருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனைவரும் வினோதமாகத் தெரிகின்றனர்.

ஊருக்குள் இருக்கும் மருத்துவர் ஒருவரிடம் (வெண்ணிலா கிஷோர்) அந்த பெண்ணைக் காட்டுகின்றனர். ஜானும் பசவாவும் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்ப, மருத்துவருக்கு ‘அல்வா’ காட்டிவிட்டு காரை எடுத்துச் செல்கிறார் கீதா. ஆனால், வழியில் சைக்கிளில் வரும் திருட்டுக் கூட்டமொன்று அவரை மயக்கமடையச் செய்துவிட்டு காரை லவட்டிச் செல்கிறது.

ஒருவழியாக உண்மையறியும் பசவா, தனது காதலியைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற அந்த நகைகள் தனக்குக் கண்டிப்பாக வேண்டும் என்கிறார். கீதா சொல்லும் அடையாளங்களை வைத்து ஒரு பாழடைந்த வீட்டுக்குள் நுழைகிறார்.

அந்த வீட்டில் இருக்கும் ராஜப்பா (ரவிஷங்கர்), அந்த நகைகள் தனது மகளுக்காகத் தான் ஆசைப்பட்டு வாங்கியது என்கிறார். அதனைக் கேட்காமல், அவற்றைத் தருமாறு கூறுகிறார் பசவா. அப்போது ஏற்படும் சண்டையில், ராஜப்பா உட்பட அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே பேயாகத் திரிபவர்கள் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் ஒருவர் கூட மனிதர் இல்லை என்பதும் பிடிபடுகிறது.

அடுத்தநாள் விடியும்போது, அந்த கிராமத்தில் மயான அமைதி நிலவுகிறது. ஜானும் கீதாவும் பயத்தில் உறைந்தபோதும், அந்த நகைகளை எடுத்துக்கொண்டுதான் அங்கிருந்த செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பசவா.

அவரது முயற்சி வெற்றி பெற்றதா? காதலிக்காக ஏன் அப்படியொரு ரிஸ்கை அவர் மேற்கொள்கிறார் என்று சொல்கிறது ‘ஊரு பேரு பைரவகோனா’வின் மீதி.

இந்த படத்தில், பைரவகோனா என்பது ஒரு மாய கிராமம் என்பதுதான் சிறப்பம்சம். அது ஏற்படுத்தும் பரவச உணர்வுதான் முழுப்படத்தையும் காணக் காரணமாக அமைகிறது.

Ooru Peru Bhairavakona review: Sundeep Kishan perseveres, but film needed more - Hindustan Times

’த்ரில்’ அனுபவம்!

பைரவகோனாவில் இருந்து ஒரு நபர் தப்பிக்க, அவரைப் பிடித்து வந்து சிலர் சித்திரவதை செய்வதில் இருந்து படம் தொடங்குகிறது. தொடர்ந்து நாயகன் செய்யும் திருட்டு வழியே, நாயகி குறித்த பிளாஷ்பேக் நமக்குத் தெரிய வருகிறது. அந்த வகையில், இது ஒரு ‘டிபிகல் மசாலா தெலுங்கு பேண்டஸி’ படத்திற்கான திரைக்கதையையே கொண்டுள்ளது.

நாயகன் – நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நடுவே, வில்லத்தனம் மிக்கவர்களாகச் சிலர் காட்டப்படுகின்றனர். அவர்கள் குறித்த தெளிவான விவரிப்பு திரைக்கதையில் இல்லை.

நாயகியைச் சார்ந்தவர்கள் படும் கஷ்டங்கள் மிகச்சில ஷாட்களில் ‘மாண்டேஜ்’ ஆக நம்மைக் கடந்து செல்கிறது. கிளைமேக்ஸிலும் கூட, அப்பாத்திரங்கள் குறித்துப் பெரிதாக விளக்கம் அளிக்கவில்லை இயக்குனர் வி ஆனந்த். போலவே, நாயகனின் ‘ஸ்டண்ட்மேன்’ வாழ்க்கையும் கூட ‘ஊறுகாய்’ அளவுக்கே திரையில் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்த திரைக்கதையில் உள்ள பலவீனங்களில் சில.

அதையும் மீறி, பைரவகோனா எனும் கிராமத்தை நம் கண் முன்னே காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். ஒட்டுமொத்தக் கிராமத்திலும் மனிதர்கள் இல்லாமல் இருப்பதற்கு, கருட புராணம் உதவியுடன் ஒரு விளக்கத்தையும் தருகிறார். ‘பேண்டஸி படம்’ பார்க்க விரும்புபவர்களை அது நிச்சயம் திருப்திப்படுத்தும்.

யதார்த்தத்திற்குச் சம்பந்தமில்லாத ஒரு கதை எனும்போது, தியேட்டரில் கிண்டல்களும் கேலிகளும் நிச்சயம் எழும். அதனைக் கருத்தில் கொண்டே, ஆங்காங்கே ஹர்ஷா, வெண்ணிலா கிஷோரின் காமெடியை புகுத்தி நம் கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறார். அதற்குத் தக்க பலன் கிடைத்திருக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்கள் வழியே இவர் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். இவர் நடித்த ‘மைக்கேல்’ கூட ஓரளவுக்குக் கவனிப்பைப் பெற்றது. அந்த வகையில், இதிலும் நல்லதொரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்.

பூமி என்ற பெயரில் நாயகியாக வரும் வர்ஷா பொல்லம்மா, அறிமுகக் காட்சியில் அமர்க்களப்படுத்துகிறார். அதன்பிறகு, அவருக்குப் பெரிதாக ‘ஸ்கோப்’ தரப்படவில்லை. நாயகன் ஏன் அந்த பைரவகோனாவுக்குள் நுழைந்தார் என்பதற்கான காரணமாக அவரே இருக்கிறார் என்பது திரைக்கதையில் இருக்கும் முக்கிய முடிச்சுகளில் ஒன்று.

இன்னொரு நாயகியாக நடித்துள்ள காவ்யா தாபர், ஏ ப்ளஸ் மாடல் போல படம் முழுக்கக் கவர்ச்சியாக வந்து போகிறார். மற்றபடி, அவரது நடிப்பு நம்மைக் கவரும் வகையில் இல்லை.

வெண்ணிலா கிஷோர், ஹர்ஷா உள்ளிட்ட சிலரின் நகைச்சுவை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறது. ரவிஷங்கர், ஜெயபிரகாஷ், பிரம்மாஜி, மைம் கோபி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களில் பெத்தம்மாவாக வரும் வடிவுக்கரசி ‘அமானுஷ்யத்தன்மை’ மிக்கவராகத் தோன்றி நம்மை திரையோடு பிணைக்கிறார்.

ராஜ் தோட்டாவின் ஒளிப்பதிவானது, விஎஃப்எக்ஸுக்கும் டிஐக்கும் இடம் தந்து தனது பங்களிப்பைத் தந்துள்ளது.

சோட்டா கே.பிரசாத்தின் படத்தொகுப்பில் பைரவகோனா சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் முழுமை, அதற்கு முன்பான பகுதிகளில் இல்லை. அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

பைரவகோனா எனும் ஊரை வடிவமைத்த வகையில் கலை வடிவமைப்பும், அங்கிருக்கும் மக்களைக் காட்டிய வகையில் ஒப்பனையும் ஆடை வடிவமைப்பும் நம்மை வசீகரிக்கின்றன.

முக்கியமாக, சேகர் சந்திராவின் பின்னணி இசை காட்சிகளுக்குண்டான சரியான தாக்கத்தை நம்முள் கடத்துகிறது. ’நிஜமே நே செப்புதுன்னா’, ‘ஹம்மா ஹம்மா’ என்று இரண்டே பாடல்கள். அவை இளையோரைச் சட்டென்று கவரும் விதமாக உள்ளன.

பானு பொகவரப்பு எழுதிய கதையை எடுத்துக்கொண்டு, வ்சனகர்த்தா நந்து வசனகர்த்தா சவிரிகனா உதவியோடு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வி ஆனந்த்.

படத்தைப் பார்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ‘த்ரில்’ அனுபவம் தான் இதன் யுஎஸ்பி. அதனாலேயே, அதற்கு மட்டும் இயக்குனர் அதிகம் முக்கியத்துவம் தந்துள்ளார்.

Ooru Peru Bhairavakona (2024) Telugu HQ HD- [1080p - 720p & 480p ] Top links

நிறைவு எங்கே?

’ஊரு பேரு பைரவகோனா’வின் கிளைமேக்ஸ் சிலருக்கு அதிருப்தியைத் தரலாம். ஏனென்றால், இறுதியாக வரும் சண்டைக்காட்சி நம்மை ஈர்ப்பதில்லை. ஆனால், படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் சந்தீப் – வர்ஷா காதல் அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இறுதிப்பகுதியை வடிவமைத்துள்ளார் இயக்குனர்.

அதுவரை ‘பேண்டஸி ஆக்‌ஷன் த்ரில்லர்’ ஆகப் பயணிக்கும் திரைக்கதை, அந்த இடத்தில் ‘பேண்டஸி ரொமான்ஸ்’ ஆக மாறுகிறது. இந்த மாற்றத்தை முழுமையாக நியாயப்படுத்த, முதற்பாதியை இன்னும் செறிவாகத் தந்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல், ’பைரவகோனா எனும் ஊரை மட்டும் பார்த்து மிரட்சியடையுங்கள்’ என்று விட்டிருக்கிறார் இயக்குனர். அதுவே, இப்படத்திலுள்ள மிகப்பெரிய மைனஸ்.

அந்த மிரட்சி போதுமே என்பவர்களுக்குப் போதுமான திருப்தியைத் தரும் இந்த ‘ஊரு பேரு பைரவகோனா’ எனும் பேண்டஸி திரைப்படம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

எலெக்‌ஷன் ஃபிளாஷ் : அறிவாலயத்தில் காத்திருக்கும் 2 பென்ஸ் பிரச்சார வேன்!

ராஜ்கோட் டெஸ்ட் : மீண்டும் அணியில் இணைந்தார் அஸ்வின்