’லியோ’ படம் வந்தபிறகு ‘கருகரு கருப்பாயி’ பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்து வருகின்றனர் 2கே கிட்ஸ்.
‘ஏழையின் சிரிப்பில்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், அந்த படம் வெளியான காலகட்டத்தில் இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. அதனை எழுதியவர் கே.சுபாஷ். அவர், அந்த படத்தின் இயக்குனரும் கூட.
அந்த இழையைப் பிடித்து பின்தொடர்ந்தால் தமிழ், இந்தியில் கே.சுபாஷ் 18 படங்கள் இயக்கியிருப்பது தெரிய வரும். உத்தம புருஷன், சத்ரியன், பிரம்மா ஆகியன அவற்றில் ப்ளாக்பஸ்டர் ரகம். ஆனால் தொண்ணூறுகளின் பிற்பாதியில் வந்த பவித்ரா, நேசம், அபிமன்யூ ஆகியன மிகச்சில ரசிகர்களையே திருப்திப்படுத்தின.
அதன்பிறகு வெளியான ‘நினைவிருக்கும் வரை’, இயக்குனர் கே.சுபாஷ் மீதான வெளிச்சத்தை அதிகப்படுத்தியது. சின்ன பட்ஜெட்டில் வெளியான இந்தப் படம், அந்த காலகட்டத்தில் ஒரு ‘ட்ரெண்ட்செட்டர்’ ஆக அமைந்தது.
சிறப்பான நடிப்புக் கலைஞர்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் தரமான ஒரு பொழுதுபோக்கு படத்தைத் தர முடியும் என்ற நம்பிக்கையை இயக்குனர்களிடையே விதைத்தது. அந்தப் படம் வெளியாகி, இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
நினைவில் நிற்பது!
‘நினைவிருக்கும் வரை’ படத்தின் நாயகி கீர்த்தி ரெட்டி, தமிழில் ‘தேவதை’ படத்தின் வழியாக அறிமுகமானார். மிக அழகான நாயகி என்று எண்ணத்தக்க தோற்றம் அவருடையது. இந்த படத்திலும் இளம் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அவரது இருப்பு அமைந்திருக்கும்.
‘அன்பே நீ மயிலா ஒயிலா’ பாடலைக் கேட்டவுடனேயே, அதில் பிரபுதேவா எப்படி ஆடியிருப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பே அதற்குப் போதுமானதாக இருந்தது. இந்த படத்தின் கதை ‘எய்ட்ஸ்’ நோயோடு தொடர்புடையது.
நாயகன் நாயகியை ஒருதலையாகக் காதலிக்க, அவரோ நாயகனை நண்பனாகக் கருதுவார். அந்த நேரத்தில் நாயகிக்கு வேறொருவரோடு திருமணம் நிச்சயிக்கப்படும். ஆனால், அவருக்கு ‘எய்ட்ஸ்’ இருப்பது நாயகனுக்குத் தெரியவரும்.
அதனால், அந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சிப்பார் நாயகன். அதன்பிறகாவது அவரது காதலை நாயகி புரிந்துகொண்டாரா என்பதோடு ‘நினைவிருக்கும் வரை’ முடிவடையும்.
இதன் கிளைமேக்ஸ் அந்தக் காலத்தில் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டது. அதாகப்பட்டது, பயங்கரமாக ‘ட்ரோல்’ செய்யப்பட்டது. அதையும் மீறி இப்படம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இதன் பாடல்கள் மற்றும் அதில் நிறைந்திருந்த பிரபுதேவாவின் கொண்டாட்டத்திற்குரிய டான்ஸ் பெர்பார்மன்ஸ்.
கூடவே விவேக், தாமு, சாப்ளின் பாலு, ஜப்பான் குமார் உள்ளிட்டோரின் நகைச்சுவையும் இப்படத்தில் இருந்தது.
’தேவ’ கானங்கள்!
’நினைவிருக்கும் வரை’ என்றவுடனேயே 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்களின் நினைவுக்கு வருவது ‘காத்தடிக்குது காத்தடிக்குது’ மற்றும் ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ பாடல்கள் தான்.
‘கானா’ பாடல்கள் என்ற பெயரில் தேவா தந்த ‘விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி’, ‘கொத்தவால் சாவடி லேடி’, ‘சலோமியா’ பாடல்களில் இருந்து இவ்விரண்டுமே பெருமளவில் வேறுபட்டு நிற்கும்.
எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் எளிமையான பாடல் வரிகள், சிறப்பான கொரியோகிராஃபிக்கான வாய்ப்புகளை அள்ளித் தரும் கோரஸ் குரல்கள், காதுகளை நிறைக்கும் தாள லயம் என்று பல அம்சங்கள் ஒன்றிணைந்து அனைவருக்குள்ளும் துள்ளலை விதைத்தது.
அதுவும் ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’க்குப் பதிலாக வேறொரு பாடல்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பிரபுதேவாவுக்கு அந்த பாடலில் அவ்வளவு திருப்தியில்லை.
படப்பிடிப்புக்கு ஒருநாள் முன்னதாக இதனை ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வத்திடம் சொல்ல, அவர் இயக்குனர் கே.சுபாஷிடம் தெரிவிக்க, உடனே தேவா இசையில் பதிவு செய்யப்பட்ட பாடலே ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’. அதற்கடுத்த நாளே அது படம்பிடிக்கப்பட்டது.
அதேபோல, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’ பாடல் ஒருநாள் இரவில் மூன்றே ஷாட்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. காரணம், முந்தைய நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்து படப்பிடிப்பு ரத்தானது தான்.
‘நினைவிருக்கும் வரை’யின் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம், ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் இத்தகவல்களைப் பகிர்ந்திருந்தார். மொத்தப்படமும் 26 நாட்களில் படம்பிடிக்கப்பட்டது என்பது இன்னொரு ஆச்சர்யப்படத்தக்க தகவல்.
‘ஆயா ஒண்ணு அடம்பிடிக்குது’ எனும் குறும்பாடலும் இதில் உண்டு. இம்மூன்று பாடல்களையும் எழுதியவர் இயக்குனர் கே.சுபாஷ். இதன்பிறகு வேறு சில படங்களிலும் சில துள்ளல் பாடல்களை அவர் தந்தார்.
‘அன்பே நீ மயிலா ஒயிலா’ பாடல் டான்ஸ் நிகழ்ச்சிகளில் இடம்பிடிக்கத்தக்கது. ஆனால், இந்த பாடல் யூடியூப்பில் காணக் கிடைக்கவில்லை. நாயகன் காதலில் உருகுவதைச் சொல்ல ‘சந்தியா சந்தியா’ பாடலும், கிட்டத்தட்ட அதே உணர்வை வெளிப்படுத்துகிற ‘ஓ வெண்ணிலா’ பாடலும் சேர்ந்து தேவாவின் ‘எவர்க்ரீன் ஹிட்’ ஆல்பங்களில் ’நினைவிருக்கும் வரை’யை இடம்பிடிக்கச் செய்தன.
சிறிய பட்ஜெட் படங்கள்!
மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், டைம் என்று தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவர் நடிப்பில் வெளியான சிறிய பட்ஜெட் படமாக அமைந்தது ‘நினைவிருக்கும் வரை’.
மிகச்சிறிய கதையும் அதைச் சரியாகத் திரையில் சொல்கிற திரைக்கதையும் அமைந்தாலே இரண்டரை மணி நேரத்துக்கு பொழுதுபொக்கு நிச்சயம் என்ற உறுதியைத் தந்தது இப்படம்.
இதன் தொடர்ச்சியாக ’ஏழையின் சிரிப்பில்’ படத்தில் கே.சுபாஷோடு மீண்டும் இணைந்தார் பிரபுதேவா. அதிலும் ‘யப்பா யப்பா ஐயப்பா’. ‘கரு கரு கருப்பாயி’, ‘பச்சைக்கல்லு மூக்குத்தியாம்’, ‘சக்கரவள்ளி’ பாடல்கள் ஹிட்டடித்தன;
தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒலித்தன. இன்று குணசித்திர நடிப்பால் நம்மை மெய்மறக்கச் செய்யும் இளவரசு இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது நாம் உற்றுநோக்க வேண்டிய ஒரு தகவல்.
பிரபுதேவா, ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் இணைந்து நடித்த ‘123’யும் கூட ஒரு மியூசிக்கல் ஹிட் தான். இதில் நாயகியாக ஜோதிகா நடித்திருப்பார். இடைப்பட்ட காலத்தில் பார்த்திபன், ரஞ்சித், திவ்யா உன்னி கூட்டணியில் ‘சபாஷ்’ என்ற த்ரில்லரையும் தந்தார் சுபாஷ்.
2000க்குப் பிறகு இந்தித் திரையுலகில் படங்கள் இயக்கிய சுபாஷ், பின்னர் ராஜ்குமார் சந்தோஷியின் படங்களில் கதாசிரியராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.
’சுயம்வரம்’ படத்தில் பணியாற்றியபோது, பிரபுதேவா மற்றும் ரோஜா சம்பந்தப்பட்ட 8 காட்சிகளை நான்கரை மணி நேரத்தில் படம்பிடித்திருக்கிறார் சுபாஷ். இது போக ‘சிவசிவ சங்கரா’ என்ற பாடலையும் பிரபுதேவா நடன வடிவமைப்பில் மூன்று மணி நேரத்தில் எடுத்திருக்கின்றனர்.
இதில் 45 ஷாட்கள் இருக்கின்றனவாம். இந்த தகவல் கே.சுபாஷ், பிரபுதேவா, எம்.வி.பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல், அன்றைய தினம் அவர்களோடு பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது கூட்டுழைப்பின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை உணர்த்தும்.
’நினைவிருக்கும் வரை’ ஹிட் ஆன பிறகு, அதே பாணியில் வெவ்வேறு வகைமையில் அமைந்த கதைகள், களங்கள், பாத்திரங்கள், வித்தியாசமான காம்பினேஷன் என்று பல படங்களை கே.சுபாஷ் தந்து வேறொரு உயரத்தை எட்டியிருக்க வேண்டும். ஏனோ அது நிகழவில்லை. ஆனால், அதனை முன்மாதிரியாகக் கொண்டு வேறு சிலரால் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டு லாபம் ஈட்டின.
’நினைவிருக்கும் வரை’ செய்த மாயாஜாலத்தை நன்குணர்ந்த பிரபுதேவா, தான் இயக்கவிருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்திற்குச் சுபாஷ் தந்த கதையையே பயன்படுத்த விரும்பினார். ஏனோ சில காரணங்களால் அந்த படம் உருவாகவில்லை.
ஆனாலும், திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டது இப்படம். அதனை முன்மொழிவது போல, இன்றும் ‘நினைவிருக்கும் வரை’ காமெடி காட்சிகளும் பாடல்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது!
பிப்ரவரி 12-ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: என்ன காரணம்?
ஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!