ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (பிப்ரவரி 5 ) நடைபெறுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜார்கண்ட் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 20 மணி நேரம் கால தாமதம் செய்த ஆளுநர், பின்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
சம்பாய் சோரன் தலைமையிலான அரசு, 3 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார்.
மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆளும் ஜேஎம்எம் – காங்கிரஸ் – ஆர்ஜேடி – என்சிபி கட்சி கூட்டணிக்கு 48 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 48 பேரில் ஜேஎம்எம் 29, காங்கிரஸ் 17, ஆர்ஜேடி, என்சிபி கட்சிகளுக்கு தலா 1 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.
பாஜகவுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்களும், ஜார்க்கண்ட் விகாசு மோர்ச்சா மற்றும் அனைத்து ஜார்க்கண்ட் மோர்ச்சா மாணவர் சங்கத்துக்கு தலா 3 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், ஜேஎம்எம் – காங்கிரஸ் – ஆர்ஜேடி – என்சிபி கட்சி எம்எல்ஏ-க்கள் ஐதராபாத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலம் திரும்பினர்.
இந்தநிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!