நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இது சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் . கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படம் குறித்தான ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க திரையரங்குகளுக்குப் பார்த்திபன், பிரிகிடா உள்ளிட்ட நடிகர்கள் கடந்த இரண்டு நாட்களாகச் சென்று வருகின்றனர். அந்த வகையில் பிரிகிடாவிடம் படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது குறித்தான கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு சேரி மக்கள் என்றாலே கெட்ட வார்த்தைகள் தான் அதிகம் பேசுவார்கள். அவர்களின் வாழ்க்கை முறையும் அப்படித்தான் என்ற ரீதியில் பிரிகடா சொன்ன கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இதற்கு மன்னிப்பு கேட்டு பிரிகிடா ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘அந்த வார்த்தைகள் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ‘இரவின் நிழல்’ படத்தில் இடம் மாறும் போது அதற்கேற்றார் போல வார்த்தைகளும் மாறும். அதை கூற நான் தவறான உதாரணம் சொல்லி விட்டேன். நான் கூறியதற்கு வருந்துகிறேன். என் மன்னிப்பை ஏற்று கொள்ளுங்கள். சினிமாவில் சாதிக்க விரும்பும் நானும் ஒரு சாதாரண பெண் தான்’ என அந்த ட்வீட்டரில் தெரிவித்தார்
பிரிகிடாவின் இந்த ட்வீட்டினை பகிர்ந்து நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது, ‘மனக்காயம் அடைந்தவர்களிடம் பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். 1989-ல் நடக்கும் கதை இது. இந்த மக்களிடம் இருக்கும் மாற்றம் கடுமையான போராட்டத்தினால் அவர்கள் பெற்ற கல்வியினால் வந்தது. என் படங்கள் பெரும்பாலும் அவர்களைக் கதாநாயகர்கள் ஆக்குவதே’ என ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஆதிரா