இதுவரை கதை… இப்போது பட்டமா? ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து பயில்வான் ரங்கநாதன்

சினிமா

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி‘. இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 20) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு. பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன.

மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்.

இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி. கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள்.

ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள்.

உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.

கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார். நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு. என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்தான்.

ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள்; ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள். இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை?

மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக்கூடாது.அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை. இங்கே வந்து அரசியல் பேசக்கூடாது. படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி வாழ்த்த வேண்டும். அதை விட்டுவிட்டு திசை மாற்றி, படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது” என்றார்.

Nedumi movie songs and trailer launch

நடிகரும், விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், ” இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.

‘காவல் தெய்வம் ‘படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார். நடிகர் திலகம் அந்த படத்தில்
சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார்.

காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்.

இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும்.

பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள். எவரும் கஷ்டப்படவில்லை. இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான்.

அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ் அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர். எவரும் வறுமையில் வாழவில்லை.

இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.

பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது. அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள் என்றும் சிரமப்பட்டதில்லை.

பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு. அதற்குப் பாட்டம் என்று பெயர். ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள். நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால்.

ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள்.

படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது ? முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம்.

நான் எதையும் நேரடியாகப் பேசுபவன். என்னை எப்போதும் தாக்கிப் பேசி வரும் தயாரிப்பாளர் கே .ராஜன் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று வர நான் வேண்டுகிறேன்.

இங்கே பேரரசு இருக்கிறார். அவர் ஒரு மேடையில் பேசினார். பெரிய படங்கள் வெளிவருவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. அவர் விஜய்யை வைத்துப் பெரிய படங்களை இயக்கியவர் தான்.

அவரது பேச்சை நாளைக்கு விஜய் கேட்டால் அதுவே அவருக்கு இடையூறாக அமையும் என்பதால் நான் அப்படி அவர் பேசக்கூடாது என்று சொல்கிறேன். இதை அவர் மீது உள்ள அக்கறையால் சொல்கிறேன்.

நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒருவர்தான்.

அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும். அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்?.

இதுவரை கதையைத் திருடினீர்கள். இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா? என்றார்.

முதல்வருக்கு அன்புமணி கடிதம்!

அபாரமான பந்துவீச்சு… அதிரடியான பேட்டிங்: ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *