நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்தியா.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து இன்று(ஜனவரி 21) 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடியது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாத நியூசிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால், நியூசிலாந்து 34.3ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.
தொடர்ந்து 50ஓவர்களில் 109ரன்கள் மட்டும் எடுத்தால் 2வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி மற்றும் தொடரையும் கைப்பற்றி விடலாம் என்று இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவருமே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.
ரோகித் ஷர்மா அரைசதம் அடித்து 51ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். விராட் கோலி, சுப்மன் கில் உடன் இணைந்து 11ரன்கள் எடுத்து அவுட்டானார்.
விராட்டை தொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கி 8 ரன்களும், தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த சுப்மன் கில் 40ரன்களும் எடுத்திருந்த நிலையில் 20.1 ஓவரில் 111 ரன்களை எடுத்து இலக்கை அடைந்தது இந்திய அணி.
2வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதால் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
மோனிஷா
அண்ணாமலையிடம் ஓபிஎஸ் சொன்னது என்ன?
2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை சாய்த்த ஷமி