‘ஆர் யூ ஓகே பேபி’ : தலைப்பு வைத்தது எப்படி? -லட்சுமி ராமகிருஷ்ணன்

சினிமா

மருமகளாக வந்த ஒரு பெண்ணை, அந்த குடும்பத்தினரே ஒதுக்கி வைக்கும் நிலையில், அந்தக் குடும்பத்திற்காக களமிறங்கும் தொகுப்பாளினியின் கதைதான் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம்.

தான் இயக்கிய படங்களின் மூலம், தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இதுவரையிலும் ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 4 படங்களை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஐந்தாவது படம் ‘ஆர் யூ ஓகே பேபி?’. 

இந்தப் படத்தை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம் பேனர் மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மிஷ்கின், ‘முருகா’ அசோக், பவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:

 “குழந்தையை மையப்படுத்தும் விதமாக இத்தலைப்பை வைத்தோம். விஜய் சேதுபதி ஒரு படத்தில் பேசும் ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுக்க ஒரு காரணம்.  
நான் நடத்திய டாக் ஷோவின் பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன்.

அந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அவர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இந்தப் படம் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக இருக்கும். இது சொல்லப்பட வேண்டிய கதை.

இந்த படத்தின் கதையை இயக்குநர் விஜய்யிடம்தான் முதலில் சொன்னேன். அவர் உடனே உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்கிறேன் என்று சொன்னதோடு, எங்களுடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

நான் சிறியதாக பண்ணால் கூட, “மேடம் நல்லா பண்ணுங்க.. பெருசா பண்ணுங்க…” என்று சொல்வார். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் இது பெரிய படமானது. இந்தப் படத்தை தொடங்கும்போது படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் இல்லை. மிக சாதாரணமான ஒரு படமாகத்தான் தொடங்கினேன்.

சமுத்திரக்கனி பிஸியான நடிகர். அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. கதையை அவருக்கு அனுப்பி, அவருடைய கருத்தை கேட்கலாம் என்று நினைத்துதான் கதையை அனுப்பினேன். அவர் அதை ஒரே இரவில் படித்துவிட்டு, மறுநாள் என்னிடம், “நான் நடிக்கிறேன் மேடம்..” என்று சொல்லிவிட்டார்.

நடிகை அபிராமியும் கதைக்காகத்தான் நடிக்க வந்தார். ரோபோ சங்கர், அனுபமா குமார், வினோதினி, நரேன், பவல் என மிகப் பெரிய நட்சத்திர கூட்டமே சேர்ந்துவிட்டது. பவல் இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதேபோல், முல்லை என்ற பெண்ணும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதிர்பாராதவிதத்தில் தாயாகும் ஒரு பெண்ணின் பாத்திரம் அது. அந்தக் கதாப்பாத்திரத்துக்கு சிறிய வயதில் தாயாகும் ஒரு பெண் தேவைப்பட்டாள். அதற்கான தேடலில் இருந்தபோது என்னுடைய எடிட்டர் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னார். ‘பேப்பர் ராக்கெட்’ இணையத் தொடரில் நடித்திருந்த இந்தப் பெண்ணை நேரில் வரவழைத்துப் பார்த்தபோது அந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார்.

அந்தப் பெண்ணை நான் ஒப்பந்தம் செய்யும்போது, “எதற்கு புதுமுகம்..? பிரபலமான நடிகையை போடலாமே?” என்றெல்லாம் பலரும் சொன்னார்கள். ஆனால், எனக்கு அவர் மீது ஏதோ தனிப்பட்ட நம்பிக்கை இருந்ததோடு, அந்தக் கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. என் கணிப்பை பொய்யாக்கவில்லை. நடிப்பில் பிய்த்து உதறி இருக்கிறார் முல்லை அரசி.

மிஷ்கின் என்னுடைய நண்பர். அவருக்கு ஒரேயொரு ஃபோன் கால்தான் பண்ணேன். “எங்க வரணும்..?, எப்ப வரணும்..?” என்று மட்டும்தான் கேட்டார். என் மீதான நம்பிக்கை அது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்சில் 20 நிமிடங்களுக்கு ஒரு கோர்ட் சீன் வருகிறது. மிகவும் ஹைலைட்டான அந்த காட்சியில் நீதிபதியாக நடித்திருக்கிறார் நரேன். அந்த ஒரு காட்சியில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் டப்பிங் பேசும்போது அவரே அறியாமல் கண்கலங்கி விட்டார்.

அதுவே இந்தப் படம் சரியாக வந்திருக்கிறது என்பதற்கான சாட்சி. இளையராஜா சாரின் இசை இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவருடைய தீவிர ரசிகை நான். படத்தில் ஒரு பாடல்தான். அதை அவரே எழுதியுள்ளார்.

படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது என்னை பக்கத்தில் உட்கார வைத்து அவர் பணியாற்றியவிதம், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிப்பது என்று அவருடைய அந்த நடைமுறையே புது அனுபவமாக இருந்தது.


சமூகம் எப்படி எதிர்பார்க்கிறதோ. அப்படி இல்லாத ஒரு விஷயத்தை இந்தச் சமூகமும், சட்டமும் முக்கியமாக மீடியாக்களும் எப்படிக் கையாளுகின்றன என்பதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.. ஆகவே படம் ரொம்பவே எமோஷனலாக இருக்கும். அதே சமயம், கமர்ஷியலாகவும் இருக்கும்.

எனது படங்கள் நிறைய விருதுகளை  வாங்கியிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், அவை கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதா? என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. அந்த சந்தேகத்தை இந்தப் படம் சரி செய்யும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இந்தப் படம் அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக மட்டும் இன்றி முழுமையான கமர்ஷியலாகவும் இருக்கும்” என்றார்.

இராமானுஜம்

அதிமுக மாஜிக்களின் ஊழல் வழக்கு: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம்!

மதுரைப் பேச்சு: வருத்தப்பட்டு வாபஸ் வாங்கிய அமைச்சர் எ.வ.வேலு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *