�விறகுக்காக வெட்டப்படும் பனை மரங்கள்: நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்!

public

“திருவாரூர் மாவட்டத்தில் 5,000 பனை மரங்கள் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. ‘பனையை அரிய வகை மரமாக அறிவித்து அவற்றை வெட்டக்கூடாது’ என்று தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அந்தப் பகுதி விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசின் மாநில மரமான பனை மரங்கள் விறகுக்காகத் தொடர்ந்து திருவாரூரில் வெட்டப்பட்டு வருகின்றன. இந்தாண்டு மட்டும் இதுவரை 5,000 பனை மரங்கள் திருவாரூர் மாவட்டத்தில் விளமல், குடவாசல் அடுத்த ஏரவாஞ்சேரி, மாங்குடி, நீடாமங்கலம் அடுத்த நகர், கோட்டூர் அடுத்த சீலத்தநல்லூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து வெட்டப்படுகிறது.

இம்மரத்தை வெட்டுவதை, லாரிகளில் ஏற்றுவதை பலர் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர, யாரும் தட்டி கேட்க முன்வருவதில்லை. பனை மரத்தின் நன்மைகள் குறித்த போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகிறது.

மழை நீரை நிலத்தடி நீருடன் சேர்ப்பது, மண் அரிப்பைத் தடுப்பது, புயல் காற்றை தனது ஓலைகளில் உள்ள மேடு பள்ளங்களின் மூலம் திசை மாற்றிடவும், காற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் பேருதவி புரிந்ததால் நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரிக்கரைகளில் அதிக எண்ணிக்கையில் பனை மரங்களை வளர்த்து பராமரித்து வந்தனர். இப்படி வளர்க்கப்பட்ட பனை மரங்கள் இன்று கணக்கிட முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது.

அழிவின் விளிம்பில் நிற்கும் பனை மரங்களை வளர்க்க முன்வருவதற்கு பதிலாக மீண்டும் திருவாரூர் விளமல் பகுதி மற்றும் மன்னார்குடி நெஞ்சாலையில் உள்ள பனை மரங்களை விறகுக்காக அழிக்க தொடங்கி இருப்பது வேதனையானது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வருத்தப்படுகின்றனர்

இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில், “திருவாரூர் விளமல் பகுதியில் பனை மரங்கள் ஆசிட் ஊற்றி அழித்திருப்பதைப் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு போதிய எதிர்ப்பு மற்றும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பனை மரங்களை வெட்டினால் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டதன் விளைவாகவே இன்று திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்படுகின்றன.

தற்போது, கொரோனா தொற்று பரவிவரும் நேரத்தில் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த இயற்கை பொருட்களை தேடிச்சென்று வாங்கி சாப்பிடுகின்றனர். இதில் பனை பொருட்கள் முதலிடத்தைப் பெறுகிறது.

ஒன்பது கோடி பனை மரங்கள் இருந்த தமிழகத்தில் இன்று வெறும் 2.50 கோடி பனை மரங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. பனையைக் காக்க பனை மர நல வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாரியம் பனை பொருட்கள் தயாரிப்பு பணியை மட்டுமே செய்கிறது. பனை மரங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதை கண்டு கொள்வதே இல்லை.

பனையை அரிய வகை மரமாக அறிவித்து அவற்றை வெட்டக்கூடாது என்று தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். பனை மரங்களை வெட்டாமல் இருக்க, அவர்களின் பட்டா நிலங்களில் உள்ள மரங்களுக்கு ஒரு பனை மரத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 வழங்கினாலே போதும் பனை மரங்கள் வெட்டப்படுவது வெகுவாக குறைந்து விடும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *