Is the ilaiyaraja superior to all?

”இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா?” : இசையுரிமை வழக்கில் எழுந்த காரசார வாதம்!

சினிமா

இசையுரிமை வழக்கில் ’இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர்’ என நினைப்பதாக இசை நிறுவன வழக்கறிஞர் கூறியதால் நீதிமன்றத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

திரையுலகின் மூத்த இசையமைப்பாளரான இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் பலவருடங்களுக்கு முன்பு அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தன.

இந்த ஒப்பந்தம் கடந்த 2014ஆம் ஆண்டுடன் முடிந்த பிறகும் காப்புரிமை இன்றி தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாக எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து 2019ஆம் ஆண்டு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில், “தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், அதேவேளையில்  இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் எக்கோ நிறுவனத்தின் மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், “படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளரிடம் உள்ளது. இந்தியத் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகின்றனர்.

எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும்.

இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேவேளையில் 1970,80 மற்றும் 90 களில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை.

மேலும் ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை நீதிபதி அமர்வு பிறப்பிக்க வேண்டும்” என தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “ஒரு இசையமைப்பாளருக்கு எதிராக அவ்வாறு உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட விஜய் நாராயண்,  ”இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என நினைப்பதாக குறிப்பிட்டார்.

இதனை கேட்டு சற்று அவேசத்துடன் பதிலளித்த சதீஷ் பராசரன், “ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா… கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி!

“ரோடு ஷோ நடத்துவதில் என்ன பிரயோஜனம்?” : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

 

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

1 thought on “”இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா?” : இசையுரிமை வழக்கில் எழுந்த காரசார வாதம்!

  1. Ilayaraja get money and do music for the film producer getting from the producer. Then the songs belong to the producer. How he can own the songs???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *