பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமையுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிரபலமான விஜய் ஆண்டனி சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதனையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். ரசிகர்களிடம் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி, கொலைகாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன். இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் தனது அனுமதியி்ன்றி ’ஆய்வுக்கூடம்’ படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்து இருக்கிறார் என்றும் அதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் ஆண்டனி ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ரூ.108 கோடியில் நான்கு சிட்கோ தொழிற்பேட்டைகள்”: தா.மோ.அன்பரசன்
அனுமன் ஜெயந்தி: போஸ்டர் வெளியிட்ட ‘ஆதி புருஷ்’ படக் குழு!