ஜெ4 ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி.ஜெபா ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’.
‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான நடிகரான புகழ் முதல்முறையாக இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (பிப்ரவரி 9) இரவு பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இயக்குநர் சுரேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் மிகப் பெரிய தூண் யுவன் ஷங்கர் ராஜா. எனது 25 ஆண்டு கால நண்பர் அவர். சிறு வயது முதல் அவரைத் தெரியும். இந்தக் கதையை முதலில் சொன்னதே யுவனிடம் தான். பின்னர் தொலைக்காட்சியில் புகழின் ஒரு ஷோ பார்த்தேன். அவரிடம் கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஆனால், படத்திற்குத் தயாரிப்பாளர் யாரும் சரியாகக் கிடைக்காமலிருந்தது. அப்போதுதான் ஜோன்ஸ் அறிமுகமானார் அவரிடம் சொன்னபோது, “உடனேயே ஆரம்பிக்கலாம்” என்றார். இந்தப் படம் அப்படித்தான் உருவானது.
புகழ் இப்படத்திற்காகத் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். கதை விவாதத்திற்கே எங்களுடன் வந்துவிடுவார். படம் முழுக்க நிஜப்புலியுடன் நடித்துள்ளார். புலியை வைத்து ஷூட் செய்தது எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது. இந்தப் படம் எந்த ஆபாசமும் இல்லாத ஒரு ஃபீல் குட் மூவி. உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.
நடிகர் புகழ் பேசும்போது, “இந்தத் தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன். ஹோட்டலில் இலை எடுத்திருக்கிறேன். இன்று இங்கு என் படத்தின் இசை விழா நடப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இயக்குநர் என்னை அழைத்து “நீதான் ஹீரோ.. புலியுடன் நடிக்க வேண்டும்” என்றார். “ஓகே சார்.. பண்ணிடலாம்..” என்றேன். “யுவன் சார்தான் மியூசிக்” என்றார். “ஆனால் ஷூட்டிங் முடிய ஒரு வருடம் ஆகும்” என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜமான புலியையே கூட்டிட்டு வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன்.
என்னுடன் நடிக்க பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த நாயகி ஷிரினுக்கு நன்றி.பெரிய, பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் இந்தப் படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி” என்றார்.
நடிகர் சூரி வாழ்த்தி பேசியபோது, “இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. முழுக்க, முழுக்க காட்டுக்குள் படத்தை எடுத்துள்ளார்கள். காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். மூன்று வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன்.
புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் நாம்தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம். நாம்தான் அதனுடைய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் நல்ல கருத்துடன் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள்.
யுவன் இருக்கிறார் என்றார்கள். அவர் இருந்தாலே வெற்றிதான். அவர் என் ‘கருடன்’ படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம்தான்.
தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும். அதைவிட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என்று சூரி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
முகநூல் நேரலையில் சிவசேனா கட்சி தலைவரின் மகன் சுட்டுக் கொலை!
உயிரிழந்த எஜமானர்… உடல் அருகே 48 மணி நேரம் காத்து உதவிய நாய்!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: விரதத்தின்போது மயக்கம்… தீர்வு என்ன?