ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா… கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி!

Published On:

| By christopher

AAP minister raj kumar anand resigned!

டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் இன்று (ஏப்ரல் 10) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கிடையே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கையால் தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு நாளும் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமின்றி உலக நாடுகள், ஐநா வரை என கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.  இது சிறையில் இருந்தபடி அரசை நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழலில் சிக்கித் தவிக்கிறது!

இதுதொடர்பாக ராஜ்குமார் ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக பிறந்த கட்சி, ஆனால் இன்று கட்சியே ஊழலில் சிக்கித் தவிக்கிறது. என்னால் இந்த அரசாங்கத்தில் பணியாற்ற முடியாது, இந்த ஊழலுடன் எனது பெயர் இணைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

’அரசியல் மாறினால் நாடு மாறும்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை ஜந்தர் மந்தர் ராம்லீலா மைதானத்தில் கூறினார். இன்று அரசியல் மாறவில்லை, ஆனால் அரசியல்வாதியாக அவர் மாறிவிட்டார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலித்களுக்கு மரியாதை இல்லை!

மேலும், “பாபாசாகேப் அம்பேத்கரால் நான் அரசியலுக்கு வந்து அமைச்சரானேன். சமுதாயத்திற்கு திருப்பிச் செலுத்த விரும்பினேன். ஆம் ஆத்மி கட்சியில் தலித் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களை மதிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சியில் உள்ள எல்லா தலித்துகளும் ஏமாந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் கட்சியில் நீடிப்பது கடினம். எனவே நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதேவேளையில் வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன்” என்று ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அவரது முடிவை ஆம் அத்மி கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜ் குமார் இல்லத்தில் ED சோதனை!

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மற்றொரு டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியை உடைத்து டெல்லி மற்றும் பஞ்சாப் ஆட்சியைக் கலைக்கவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அதனை நிறைவேற்ற பாஜக தற்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் மதுபான விசாரணைக்கு தொடர்பில்லாத பணமோசடி வழக்கில் ராஜ் குமார் ஆனந்த் இல்லத்தில் தொடர்ந்து 23 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அவர் ஊழல் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியது. ஜேபி நட்டா, அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல் என அனைவரும் ’ராஜ் குமார் ஊழல்வாதி’ என்று குற்றம் சாட்டினர். அப்போது, ​​அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய பாஜக, இப்போது அவரை தங்கள் கட்சியில் வரவேற்குமா, இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பதவி விலகலுக்கு இதுதான் காரணம்!

அதே நேரத்தில் ராஜ்குமார் ஆனந்தை நேர்மையற்றவர் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்… அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ராஜ் குமார் ஆனந்த் பயந்துவிட்டார். அதற்காக அவர் மீது ஆம் ஆத்மி கட்சி அனுதாபப்படுகிறது. அமலாக்கத்துறை தன்னை அழைத்துச் சென்றுவிடுமோ? திகார் சிறையில் பல வருடங்கள் கழிக்க நேரிடுமோ? என்ற பயம் தான் அவரது பதவி விலகலுக்கு காரணம்.

இது ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வும், டெல்லி அமைச்சருமான ஒருவர் எப்படி அச்சுறுத்தப்படுகிறார் என்பதையும், மீண்டும் பாஜக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதையும் நீங்களே கற்பனை செய்து பாருங்கள்” என்று சவுரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார்.

14 ஆண்டுகளாக கெஜ்ரிவாலுடன்…

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றி வரும் ராஜ் குமார் ஆனந்த்,  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக உள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பட்டேல் நகரில் 30,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அனைத்து தியேட்டர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!

EID 2024: ரம்ஜான் ஸ்பெஷலாக இத்தனை படங்கள் வெளியாகிறதா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel