மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குநர் அமீர்.
யோகி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான அமீர், அதன் பின்னர் மற்ற ஹீரோ படங்களில் அவ்வப்போது கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் மூலமாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அமீருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
சினிமாவை தாண்டி மக்கள் பிரச்சனைக்காக பல மேடைகளில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அமீர், தற்போது திரையிலும் அரசியல் பேச தயாராகிவிட்டார்.
அறிமுக இயக்குநர் ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள படம் “உயிர் தமிழுக்கு”. இந்த படத்தில் அரசியல் கட்சி தலைவராக அமீர் நடித்திருக்கிறார்.
இயக்குநர் ஆதாம் பாவா இந்த படத்தை இயக்கியது மட்டுமின்றி மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
பிரபல யூட்யூப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய “ஆன்ட்டி இந்தியன்” படத்தையும் ஆதம் பாவா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் டீசரை படக் குழு வெளியிட்டிருக்கிறது.
இந்த டீசரில், ஒரு கொலை வழக்கில் தொடர்புள்ள ஒரு குற்றவாளி போலீசாரிடம் சரணடைய அந்த குற்றவாளியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரபல அரசியல் கட்சி தலைவராக இருக்கும் அமீரை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
“பணம், பதவி, பவர் இந்த மூன்று எழுத்தையும் அனுபவிச்சது மாதிரி ஜெயில் என்ற மூன்று எழுத்தையும் அனுபவிச்சா தானே முழு அரசியல்வாதியா ஆக முடியும்” என்று அமீர் குரலில் இடம்பெற்றுள்ள வசனம் கவனத்தை ஈர்க்கிறது.
அதேபோல் டீசரின் முடிவில் “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்று சிரித்துக் கொண்டே ஸ்டைலாக அமீர் வசனம் பேசுவது செம மாஸ். இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் அமீருக்கு “மக்கள் போராளி” என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், சரவண சக்தி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ்
“மிரட்டல் வில்லன்” டேனியல் பாலாஜி காலமானார்!
காசு இல்லை… நிதியமைச்சர் சொன்ன காரணம் சூப்பர் : நிர்மலா சீதாராமனை விமர்சித்த ஸ்டாலின்
தள்ளாடி விழுந்த பார்…பின்னணி என்ன?