ஆர்.ஆர்.ஆர் படத்திற்குப் பிறகு நடிகர் ராம் சரண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். இது ராம் சரணின் 15வது படமாகும்.
இந்த படத்தை தொடர்ந்து ராம் சரணின் 16 வது படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் ராம் சரணின் 16வது படத்திற்கான பூஜை விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. RC 16 படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கின்றார்.
இந்நிலையில் தற்போது ராம் சரணின் 17 வது படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான சுகுமார், ராம் சரணின் 17 வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான “ரங்கஸ்தலம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 1 படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சுகுமார் – ராம் சரண் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக வெளியான செய்தி தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
RC 17 படத்தின் அறிவிப்பை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில் ராம் சரணுக்கு “குளோபல் ஸ்டார்” என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடிகர் ராம் சரணுக்கு “மெகா பவர் ஸ்டார்” என்ற பட்டம் அவரது படங்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
RC 17 படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சீரி பாயும் 2 குதிரைகளின் உருவங்களும், #Raring2Conquer என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்தது.
வரும் மார்ச் 27ஆம் தேதி நடிகர் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து அவர் படங்கள் குறித்த அப்டேட்கள் வெளியாவதால் ராம் சரணின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
”மியூசிக் அகாடமியில் அனைத்து தரப்பினரும் வேண்டும்” : ரஞ்சனி, காயத்ரி கடிதம்!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஸ்டாலின், விஜய் வாழ்த்து!