தேர்தலில் போட்டியிட காசு இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதை குறிப்பிட்டு அவரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.
தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை தனக்கு வாய்ப்பு அளித்ததாகவும், ஆனால் தன்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணம் இல்லை என்பதால் போட்டியிடவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (மார்ச் 29) தருமபுரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், “நேற்று ஒரு செய்தி பார்த்தேன். நம்முடைய மக்களுக்கு வெள்ள பாதிப்பின்போது, நிவாரணம் கொடுத்ததைப் பிச்சை என்று சொன்னாரே, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… பேசிய செய்தி! இவர்கள் பிச்சை என்று சொன்னதும், நான் என்ன சொன்னேன்? ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள்… மக்கள் உங்களுக்குச் சொல்லும் பதிலில், ’பிச்சை’ என்ற சொல்லே இனி உங்கள் ஞாபகத்திற்கு வராது என்று சொன்னேன்.
ஆனால், வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம்தான் சூப்பர்.
தேர்தலில் போட்டியிட அவரிடம் பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். சொல்வது யார்? சாதாரண மக்களின் பேங்க் பேலன்ஸ் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கிறவர்கள் சொல்கிறார்கள்.
இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பா.ஜ.க. வேட்பாளர்கள் நிற்கிறார்களே? அந்தப் பணம் என்ன ஆனது? உங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? யாரைக் குற்றம்சாட்டுகிறார்?
தேர்தலில் போட்டியிட மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கத் தெரிய வேண்டும். மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.
தேர்தலில் நின்றால், மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று, தப்பிவிட்டீர்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆரத்திக்கு பணம்?: அண்ணாமலை விளக்கம்!
டிஜிட்டல் திண்ணை : சசிகலாவுடன் எடப்பாடி சமரசம்… சர்வே முடிவு எதிரொலி!