தனி ஈழம் நிறைவேறாமல் போனதற்கு இதுதான் காரணம்: சுப்புலட்சுமி ஜெகதீசன்

சினிமா

நடிகர் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. பிரபாகரன் வரலாறு சம்பந்தமான “மேதகு” படத்தை இயக்கிய கிட்டு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.

சல்லியர்கள் படத்தில் சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், சிங்கள ராணுவ வீரனாக திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர்.

இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நவம்பர் 26ஆம் தேதி சென்னை சாலிகிராமம் பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம்நாத் பழனிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.மணியரசன், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழக அரசியல் களத்தில் இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் நடத்திய போராட்டம், அதைப் பற்றிய செய்திகள், தகவல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஈழப்போராட்டத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்ட, பயன்படுத்தி வருகின்ற எந்தவொரு அரசியல் கட்சி, சமூக இயக்கங்கள் எதுவும் ஈழ போராட்டம் பற்றிய குறும்படம், திரைப்படங்களை தயாரித்து பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை செயல்படுத்தியது இல்லை .

ஈழ ஆதரவாளர்கள், தனி நபர்கள் தங்கள் சொந்த முயற்சியில் திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். அந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுதான் கிட்டு இயக்கத்தில் வெளியான மேதகு.

tamil eelam subbulaksmi jagadeesan speech

அதனை தொடர்ந்து ஈழப்போராட்ட யுத்தகளத்தில் தமிழ் மருத்துவர்கள் ஆற்றிய அரும்பணியை யுத்தப் பின்னணியில்” சல்லியர்கள்” படத்தில் பதிவு செய்திருப்பதாக கூறுகிறார் இயக்குநர் கிட்டு.

சல்லியர்கள் படத்தின் ஒலி நாடா, டிரைலரை வெளியிட்ட பின் முன்னாள் மத்திய இணையமைச்சரும் தீவிர ஈழ ஆதரவாளரும் அதன் காரணமாக தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு வருட காலம் சிறையில் இருந்தவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசும்போது,

“இந்த படத்தின் இயக்குனர் பெயரை கேட்டபோது விடுதலைப்புலிகளின் தளபதிகிட்டு அண்ணாவுடன் பழகிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்து விட்டன. இந்த படம் எனது கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது.

எண்பதுகளின் மத்தியில் இலங்கையில் போர் நடைபெற்றபோது காயம்பட்ட பெண் போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். ஈரோட்டில் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையில் அடித்தளம் முழுமையும் ஈழ போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக மட்டும் ஒதுக்கப்பட்டது.

அவ்வாறு சிகிச்சை முடிந்தபின் அவர்களை எனது வீட்டில் தங்க வைத்து முழுமையாக குணமடைந்தபின் தான் ஈழத்திற்கு அனுப்பி வைத்தேன். இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தான் இருந்தார்.

எப்படி பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேசை தனியாக பிரித்து கொடுத்தாரோ, அதேபோல தனி ஈழத்தை பிரித்து தரும் எண்ணத்தில்தான் அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது மரணம் எதிர்பாராத ஒரு தேக்கத்தை கொண்டு வந்துவிட்டது.

அவரது மகன் ராஜீவ் காந்தியும் அதை நோக்கித்தான் நகர்ந்தார். ஆனால் இங்குள்ள சிலர் தங்களது சுயநலம் காரணமாக தனி ஈழம் பெற்றுத்தந்து விட்டால் அதேபோல இங்கு இருப்பவர்கள் தனித்தமிழ்நாடு கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிற குறுகிய நோக்கத்தில் ராஜீவ் காந்தியை திசைதிருப்பி விட்டனர்.

அதன் காரணமாக தனி ஈழம் என்கிற கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது. இங்கே ஈழத்தமிழர் பற்றிய வரலாறு குறித்த அடிப்படை அறிவு, சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமலே இங்கு உள்ளனர்.

இதுபோன்ற பல படங்கள் வந்தால்தான் அந்த நிலை மாறும். இந்த சல்லியர்கள் படம் பட்டி தொட்டி எங்கும் வெளியிட்டு ஈழவரலாறு வெகுஜன மக்களை சென்றடைய என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், இந்தப்படத்துடன் நின்று விடாமல் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டம், ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றியெல்லாம் திரைப்படங்கள் தயாரிப்பது தொடர வேண்டும். அதற்கான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.

இராமானுஜம்

கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா!

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.