தமிழ் சினிமாவில் தனது ஆக்ரோசமான நடிப்பால் மிரட்டி வரும் பிரபல மூத்த நடிகர் ராஜ்கிரணின் வீட்டுக்கு நேற்று (பிப்ரவரி 15) மாலை வந்த சில மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
தமிழ் சினிமாவில் தொடை தெரியும் அளவுக்கு வேட்டி கட்டி மிரட்டும் உடற்கட்டுடன் 80-90களில் வலம் வந்த முக்கிய நடிகர்களுள் ஒருவர் ராஜ்கிரண். இராமநாதபுரத்தின் கீழக்கரையில் பிறந்த காதர் மொய்தீன் தான், 1989ம் ஆண்டு வெளியான ‘என்ன பெத்த ராசா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னாளில் ’ராஜ்கிரண்’ என்று அறியப்பட்டார்.
மிரட்டலான தாத்தா
நடிகராக மட்டுமின்றி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவராகவும் அறியப்படும் ராஜ்கிரண், நாயகனாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு தற்போது தந்தை, தாத்தா உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடித்து வருகிறார்.
அப்படி ராஜ்கிரண் நடித்த பாண்டவர் பூமி, முனி, கிரீடம், சண்டக்கோழி, பவர் பாண்டி, வேங்கை, மஞ்சப்பை, கொம்பன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படத்தில் அதர்வாவுக்கு தாத்தவாக நடித்து இருந்தார்.
தமிழகம் – தமிழ்நாடு சர்ச்சை
இப்படி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம்வரும் ராஜ்கிரண், கடந்த சில ஆண்டுகளாக அரசியல், மதம், சமூகம் மற்றும் தேசபக்தி சார்ந்து மனதில் தோன்றும் கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படையாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
கடந்த மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ’தமிழகம்’ என்ற அழைத்தது சர்ச்சையான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ”வேறு ஏதேதோ பிரச்சினைகளை மடைமாற்றுவதற்காக சலம்பல்கள் எழுப்பப்படும். என் நாடு தமிழ் நாடு. இந்திய தேசத்தின் வள நாடு.” என்று ராஜ்கிரண் பதிவிட்டிருந்தார்.
காதலர் தின பதிவு
அதன்பின்னர் கடந்த 30ம் தேதி, காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த கோட்சேவால் எப்படி காந்தி கொலை செய்யப்பட்டார் என்று தளபதி பாண்டியன் என்பவரின் விரிவான விளக்கத்தையும் ராஜ்கிரண் பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் காதலர் தினத்தையொட்டி வெளியிட்ட பதிவில், ”காதலில் உன்னதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் வெறும் உடற்கவர்ச்சியையோ, பணம், புகழ் கவர்ச்சிகளையோ, அல்லது வேறெந்த சுயநல காரணங்களின் நோக்கங்களையோ மனதில் வைத்துக்கொண்டு, இம்மாதிரியான அசிங்கங்களுக்கெல்லாம், காதல் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு, காதல் என்ற வார்த்தையையே அசிங்கமான வார்த்தையாக்கிவிட்டார்கள்.” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இப்படி தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
வீட்டுக்கு வந்து மிரட்டல்
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகர் ராஜ்கிரண் வீட்டிற்கு வெளியே நேற்று மாலையில் அடையாளம் தெரியாத சுமார் 5 நபர்கள் வந்தனர்.
அப்போது வீட்டு காம்பவுண்டுக்குள் செல்போனில் பேசிக்கொண்டிருந்த ராஜ்கிரண் மனைவி கதீஜாவிடம் ’ராஜ்கிரண் சார் இருக்கிறாரா? நாங்கள் யூடியூப் சேனலில் இருந்து வருகிறோம்’ என்று கூறியுள்ளனர். அவர்களிடம் ’எந்த சேனல்? எங்கிருந்து வருகிறீர்கள்? சேனலின் பெயர் சொல்லுங்கள்’ என்று கேட்டுள்ளார் கதீஜா.
உடனே மற்றொரு நபர் அருகில் வந்து ’மியூசிக் டைரக்டர் வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள்’ என்றுள்ளார்.
வந்தவர்கள் இப்படி மாறி மாறி பேசியதால், சந்தேகமான கதீஜா, பதற்றத்துடன் காவல் நிலையத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்துகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், கதீஜாவைப் பார்த்து ’நீங்கள் முஸ்லிம் விரோதி’ என்றும், ’இந்து விரோதி’ என்றும் கோஷமிட்டபடியே அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளனர்.
ராஜ்கிரண் மனைவி புகார்
இச்சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரணிடம் தெரிவித்த அவரது மனைவி கதீஜா, நேற்று இரவு நந்தம்பாக்கம் எஸ் 4 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனை பெற்றுக்கொண்ட போலீசார், இதில் ஏதேனும் இந்துத்துவ – இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த தெருவில் இருக்கும் சிசிடிவி பதிவுகள் மற்றும் நடிகர் ராஜ்கிரண் வீட்டு முகப்பில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
-வணங்காமுடி
இடைத்தேர்தலில் முறைகேடு? : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
தலையாரி தேர்வில் உருளும் தாசில்தார் தலை: அமைச்சர் நேரு மாவட்டத்தில் சலசலப்பு!