இந்த வாழ்க்கை அதி அற்புதமானது. ஏனெனில், நாம் நினைக்கும் விஷயங்கள் எல்லா நேரத்திலும் நடக்காது. ஒவ்வொரு கணத்திலும் சுவரில் பட்டுத் தெறிக்கும் பந்து போல ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்போம். ஆனால், ஏதோ ஒரு இடத்தில் இந்த வாழ்க்கையானது அற்புதத்தை நிகழ்த்தும். அப்போது, வெற்றியின் உச்சாணிக்குக் கொண்டுச் சென்றுவிடும். அதனால் தான் கூறுகிறேன், இந்த வாழ்க்கை அதி அற்புதமானதென்று. ஆனால், அப்படியான அற்புதங்கள் வெறும் அதிர்ஷ்டத்தினால் நிச்சயம் நடந்துவிடாது. அதற்குப் பின், மிகப்பெரிய உழைப்பு நிறைந்திருக்கும். அப்படி, உழைப்பினால் உயர்ந்தவர்கள் ஏராளம். அப்படியான ஒரு மனிதர் நடிகர் ராஜ்கிரண்.
அவருக்கு இன்று (ஆகஸ்ட் 26) பிறந்த நாள்.
ராஜ்கிரணை நடிகராக மட்டுமே தமிழ் சினிமா நமக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. நடிகராவதற்கு முன்பு, சுவரில் எரியப்பட்ட பந்து போல பலமுறை ஆரம்பித்த இடத்திற்குத் திருப்பி அனுப்பியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ராஜ்கிரணின் சொந்த ஊர் ராமநாதபுரம். ஐபிஎஸ் படித்து மக்கள் சேவையில் ஈடுபட விரும்பினார். ஆனால், இந்த வாழ்க்கை அதி அற்புதமானதல்லவா, குடும்பச் சூழல் காரணமாக 16 வயதில் சென்னைக்கு வேலைக்காக வந்துசேர்கிறார்.
நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் எனும் நடிகர்களின் பொதுவான இலட்சியம் இவரிடம் இல்லை. சினிமாவில் ஹீரோ கனவு பற்றி யோசிக்காதவரை , ஹீரோவாக்கி அழகுப்பார்த்தது இந்த அதி அற்புதமான வாழ்க்கை ! அந்தக் கதையைத் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்!
சென்னையில் வேலைத் தேடி சுற்றியவருக்கு, சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் வேலைக் கிடைக்கிறது. அதுவும், ரூ.4.50 பைசாவுக்கு தினகூலியாக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா விநியோகஸ்தில் தேறுகிறார். ஒரு கட்டத்தில் தனியாக அலுவலகம் போட்டு திரைப்பட விநியோக வேலையைத் துவங்குகிறார். 70-களில் கோடம்பாக்கத்தில் ‘ஏசியன் காதர்’ என்று கேட்டால் இவரை நன்றாகத் தெரியும். ஏசியன் காதர் ஒரு படத்தைக் கையில் எடுத்தால் வெற்றி உறுதி. ஆனால், நிர்வாகச் சிக்கலின் காரணமாக மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கிறார். ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்கிறார். அதி அற்புதமான இந்த வாழ்க்கை ராஜ்கிரணை பூஜ்ஜியத்திலிருந்து துவங்க வலியுறுத்தியது.
விடாமுயற்சியும், கடின உழைப்பையும் எந்தச் சூழலிலும் கைவிடக் கூடாது. அதுதரப்போகும் விளைச்சலுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஆனால், விளைச்சல் பொய்த்துவிடாது என்பதே உண்மை. அப்படியான, விளைச்சலுக்காக வேலைகளைத் தொடர்ந்து செய்துவந்தார் ராஜ்கிரண். விநியோகத்தில் இழப்பு ஏற்பட்டதால், அடுத்தக் கட்டமாக பட தயாரிப்புகளில் இறங்கினார். இந்தமுறை விநியோக கம்பெனியாக இருந்த ஏசியன் பிக்சர்ஸ் நிறுவனமானது ரெட் சன் ஆர்ட் எனும் தயாரிப்பு நிறுவனமாக மாறியது.
இப்படித்தான், தயாரிப்பாளாரானவர் ஹீரோவாகவும் முடிவெடுக்கிறார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடித்து, தயாரித்து அறிமுகமான படம் ‘என் ராசாவின் மனசிலே’. முதல் படத்திலேயே பெரிய ஹிட். வசூலில் மிகப்பெரிய ரெக்கார்ட் சாதனைப் படைத்தது இப்படம். இந்தப் படம் ராஜ்கிரண் எனும் நடிகரை மட்டுமல்ல, வடிவேலு எனும் பெருங்கொடையையும் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தது.
முதல் படத்திலேயே அனைவராலும் விரும்பப்படும் நடிகராக மாறினார் ராஜ்கிரண். அழகிய முகம், ஸ்டைலிஷான காஸ்ட்யூம் எனும் ஹீரோவுக்கான எந்தத் தோற்றமும் இவரிம் இல்லை. இதுதான், இவரின் ப்ளஸ் கூட. கிராமத்துக் கதைகளுக்கேற்ற முகம், விரைப்பான தோற்றம், பட்டிக்காட்டானாக தன்னுடைய ப்ளஸ்ஸை மட்டும் மனதில் கொண்டு படத்தேர்வுகளில் இறங்கினார். அதில் பெரிய வெற்றியையும் கண்டார்.
விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக , நடிகராக முயற்சி செய்துப்பார்த்தவருக்கு இயக்குநராகும் எண்ணமும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. பரிசோதனை முயற்சியாக ராஜ்கிரண் இயக்குநரான படம் ‘அரண்மனைக்கிளி’. அதன்பிறகு, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே என 90களில் சில படங்களில் நடித்தவரை, இன்னும் உச்சாணியில் கொண்டு வைத்தது 20களில் வெளியான சில படங்கள்.
வயது போன காலத்திலும் நடித்தால் ஹீரோ மட்டுமே என்பதில் உறுதியாக இருந்து, சினிமா வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் ஏராளம். அப்படியான எந்த திட்டமும் இல்லாதவர் ராஜ்கிரண். நமக்கு ஏற்ற ரோலாக இருந்தால், யார் ஹீரோ என்றாலும் பரவாயில்லை எனும் திறந்த மனதுடன் இருந்தார் ராஜ்கிரண். அப்படி, பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் இவர் நடித்த ‘நந்தா’ இவருக்கு வேறு ஒரு முகத்தைக் கொடுத்தது.
நந்தா படம் வெளியான அதே காலக்கட்டத்தில் இன்னொரு ஹிட்டாக அமைந்தது ’பாண்டவர் பூமி’. இரண்டு படங்களுமே இரண்டு துருவங்கள். ஒரு படத்தில் முரட்டு மனிதர். இன்னொரு படத்தில் சாதுவானவர். இரண்டு கதாபாத்திரங்களிலும் நன்றாகவே பொருந்திப் போனார்.
கோவில், சண்டைக் கோழி, காவலன், வேங்கை, ரஜினிமுருகன் என ஹிட் படங்களில் பட்டியலில் இவர் நடிப்பும் இடம்பெற்றிருக்கும். இதையெல்லாம் தாண்டி, ராஜ்கிரணின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ‘பா.பாண்டி’. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது.
ஒன்று, கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ராஜ்கிரண். அதே கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் மீண்டும் ஹீரோவாக ‘பா.பாண்டி’ படத்தில் நடித்தார். இந்த இடத்தில் தான், வாழ்க்கை நமக்காக பாதுகாத்து வைத்திருக்கும் அற்புதங்களை உணரமுடிகிறது.
இரண்டாவது, 60 வயது
கிழவன் படத்தின் ஹீரோவா? காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் நிறைந்த கமர்ஷியல் பட ஹீரோ ராஜ்கிரணா என பலரையும் யோசிக்க வைத்தது. ஆனால், பா.பாண்டி வெளியாகி பெரிய ஹிட். தனுஷ், ராஜ்கிரண் என இரண்டுபேருக்குமான வெற்றி . ராஜ்கிரண் வாழ் நாளில் பா.பாண்டி மாதிரியான வாய்ப்பு , இன்னொரு நடிகருக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.
செழிப்பான சாம்ராஜ்ஜியத்திலிருந்து ஒருவர் பெரிய நட்சத்திரமாவது பெரியவிஷயமல்ல. ராஜ்ஜியத்தை உருவாக்கும் ஒருவரின் கதை இங்கு மிகப்பெரிய விஷயம். நமக்கும் மிகப்பெரிய ஊக்கமளிக்கும். அப்படியானவர் ராஜ்கிரண்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.
**- ஆதினி**
�,