யூடியூபர் சவுக்கு சங்கர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்… அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்திருக்கிறார்.
சவுக்கு சங்கரின் தாயாரான ஏ.கமலா தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில், “என் மகனின் கைது மற்றும் அவர் போலீஸாரால் நடத்தப்பட்ட விதம் குறித்து அவரது வழக்கறிஞர்களின் வாயிலாக அறிந்தேன்.
சமீபத்தில் சிறைச்சாலையில் வழக்கறிஞர் அவரைச் சந்தித்தபோது, சிறைச்சாலைக்குள் கொடூரமாக தாக்கப்பட்டதாக சங்கர் கூறியிருக்கிறார். தாக்குதலால் எனது மகனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி எனது மகனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் சவுக்கு சங்கரின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் இன்று (மே 8) முறையீடு செய்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இதற்கிடையே சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் மே 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
–வேந்தன்
விழுப்புரம் ஸ்டிராங் ரூமில் சிசிடிவி மீண்டும் பழுது : ஆட்சியர் விளக்கம்!
Gold Rate: இதுக்கு தங்கம் விலை குறையாமலே இருக்கலாம்… எதுக்கு?