மெட்ரோ ரயில் பணிகளுக்காக மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்யத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
தற்போது தினசரி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மேலும் சில பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டது.
எனவே சென்னையில் 63,245 கோடி மதிப்பில் 118.9 கி.மீ தொலைவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தொலைவிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தொலைவிலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதைகள் வழியாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காகச் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ பணிகளுக்காகப் பல இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை மெட்ரோ நிலையம் அமைப்பதற்காகக் காந்தி சிலைக்கு அருகில் 90 சதவீத பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே காந்தி சிலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவில் மாற்றி அமைப்பதற்கு மெட்ரோ நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
மெட்ரோ பணி நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்படும். அதுவரை பொதுமக்கள் காந்தி சிலையைப் பார்வையிடவோ, மாலை அணிவிக்கவோ வாய்ப்பிருக்காது.
மெட்ரோ பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது காந்தி சிலைக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா