மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தான் தன்னுடைய முழு கவனமும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 13) குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அகில இந்திய தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது உங்களது கடினமான உழைப்பையும், கூர்மையான அறிவையும், விடா முயற்சியையும் காட்டுகிறது. சாதாரணமாக யாருக்கும் இந்த வெற்றி கிடைத்து விடாது.
லட்சக்கணக்கானோர் இந்த தேர்வில் வெற்றி பெற்றாலும் அதில் வெற்றி பெற்று விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்களும் ஒருவர். உங்களது முகங்களை பார்க்கும் போது கிராமப்புற முகங்களும் தென்படுகிறது.
உங்கள் குடும்பத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாகவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். வாழ்க்கையில் இந்த அளவிற்கு உங்களை உயர்த்தியவர்களை எந்நாளும் மறக்காதீர்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என்பது உயர்ந்த பணிகள் என்பதை தாண்டி அதற்கென்று ஒரு தனி பொறுப்பும் கடமைகளும் உள்ளது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் எளிய மக்கள் குறிப்பாக கிராம பகுதி மக்களின் வாழ்வானது அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால் தான் மேம்பட வேண்டும். இந்தியாவை போன்ற மக்கள் தொகை அதிகமான நாட்டில் இது மிக மிக முக்கியமானது. அதற்கு அரசு திட்டங்கள் முறையாக அவர்களை சென்றடைய வேண்டும். அது நடைபெற வேண்டுமென்றால் நாளைய தினம் முக்கிய பொறுப்புகளில் அமரப்போகும் உங்களை போன்ற சிறந்த அலுவலர்கள் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்திட வேண்டும்” என்ற முதல்வர் தொடர்ந்து பேசுகையில்,
“தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்திட இருக்கிறோம். உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில் இந்தியா 127வது இடத்தை பெற்றிருக்கிறது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். இதனை நீக்குவதற்கான முயற்சியாக இதனை திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கலைஞரின் பெயர் அந்த திட்டத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அவர்தான் பெண்களுக்கு சொத்துகளில் சம பங்கு உண்டு என்று 1989 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் தரவிருக்கிறோம். மகளிருக்கு பொருளாதார வலிமை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளோம். யாருக்கெல்லாம் இந்த 1,000 ரூபாய் என்ற கேள்வி எழுந்த போது, யாருக்கெல்லாம் 1,000 ரூபாய் தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறியிருந்தேன். என்னுடைய கவனம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.
மாவட்ட ஆட்சியர்களிடம் இதற்கான முழு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளேன். ஒவ்வொரு மாவட்ட மக்களும் இதில் பயனடைய இருக்கிறார்கள்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு வழங்குவது என்பதை திமுகவினர்தான் தலையிட்டு முடிவு செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந் நிலையில்…இத்திட்டத்தை செயல்படுத்தும் முழு பொறுப்பையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைத்திருப்பதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மோனிஷா
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை!
தென்காசியில் தபால் ஓட்டு மறு எண்ணிக்கை தொடங்கியது!
ஊட்டி: தாவரங்களின் தகவல்களை அறிய கியூ ஆர் கோட்!