QR-code on plants in ooty botanical garden

ஊட்டி: தாவரங்களின் தகவல்களை அறிய கியூ ஆர் கோட்!

தமிழகம்

தாவரங்கள் மற்றும் மரங்களின் தகவல்களை அறியும் வகையில் நீலகிரியில் முதல் முறையாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கியூ ஆர் கோட் (QR Code) முறையை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தாவரங்கள், மரங்கள் கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவந்து ஊட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆங்கிலேயர்களால் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான வகைகளைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் மரங்கள் செழித்து வளர்ந்து தற்போதும் பூங்காவை அலங்கரித்து வருகின்றன.

இவற்றின் பின்னணியை சுற்றுலா பயணிகள் மற்றும் தாவரங்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் கியூ ஆர் கோட் முறையை முதல் முறையாக பூங்காவில் அறிமுகம் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக சுமார் 1,000 மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு கியூ ஆர் கோட் போர்டுகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள பூங்கா அதிகாரிகள்,  “1848ஆம் ஆண்டு ஊட்டியில் தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து, அர்ஜென்டினா, நேபாளம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தாவரங்கள், மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியன நடவு செய்யப்பட்டன.

1867-ல் முழுமையான தாவரவியல் பூங்காவாக உருவானது, இன்றளவும் பல வெளிநாடுகளை சேர்ந்த தாவரங்கள், மரங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.

இவற்றின் பின்னணியை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தாவரவங்கள் மற்றும் மரங்களின் பெயர், தாவரவியல் பெயர், பூர்வீகம், வயது உள்ளிட்ட தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவாக அறியும் வகையில் வடிவமைத்துள்ளோம்.  அனைவரும் செல்போனில் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி

TNPL:கோவை அதிரடி..நெல்லை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *