மகளிர் காவலர் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் பெண் காவலர்களுக்காக 9 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக காவல்துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் பொன்விழா நிகழ்ச்சி இன்று (மார்ச் 17) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ‘அவள்’ திட்டத்தை தொடங்கி வைத்து, பின்னர் சிறப்புத் தபால் தலையையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பொன்விழா கொண்டாடும் இந்த நேரத்தில் காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண் காவலர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நேரம், காலம், வெயில், மழை, இரவு, பகல் பாராமல் ஊருக்காக உழைக்க கூடிய காவலர்களை பாராட்டக்கூடிய விழா இது. வீட்டையும் நாட்டையும் சேர்த்துப் பாதுகாக்கிறார்கள் நம் பெண் காவலர்கள்.
பெண்கள் இன்று காவல்துறையின் அனைத்து பிரிவுகளிலும் அதாவது, சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு, ரயில்வே துறை, சிபிசிஐடி, போக்குவரத்து, உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்புக் காவல்படை, இணையக் குற்றப்பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்புப் படை என அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர்களில் 503 (37 சதவீதம்) காவல் ஆய்வாளர்கள் பெண்கள் தான். இந்த ஆண்டு பணியில் சேர்ந்த 21 காவல்துறை துணை கண்காணிப்பாளர்களில் 17 பேர் பெண்கள்.
கொரோனா தொற்று காலத்தில் காலமான காவலர்கள் உட்பட பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்கும் விதமாக காவல் நிலைய வரவேற்பாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு 1,025 நபர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். அதில் 501 பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் அமைத்திருக்க வேண்டும். ஆனால், 41 உட்கோட்டங்களில் மகளிர் காவல் நிலையங்கள் இல்லை. 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைத்தவுடன் 20 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பெண்களின் நலன் காக்கும் விதமாக இந்த ஆண்டு கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உட்பட 19 இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐநா மகளிர் தினத்தை உலகளவில் புதுமைகளும் தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டாடுகிறது. ஆனால் அந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்.
நமது காவல்துறையைப் பொறுத்தவரை இணையத்தை 70 விழுக்காடு பெண்கள் தான் பயன்படுத்துகிறார்கள். காவல் தொழில்நுட்ப பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணியாற்றுகிறார்கள். புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் விதமாக விரல் ரேகை பிரிவில் 27 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள்” என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பொன் விழாவை ஒட்டி பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகள்
“இந்த வரிசையில், இன்று மகளிர் காவலர்கள் பொன்விழாவில் வரலாற்று சிறப்புமிக்க 9 அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
1.பெண் காவலர்கள் குடும்பத் தலைவிகளாக இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ’ரோல் கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு இனிமேல் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றி அமைக்கப்படும்.
2.சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.
3. அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கென தனி கழிவறையோடு ஓய்வறையும் கட்டித் தரப்படும்.
4. பெண் காவலர்கள் காவல் நிலையத்திற்கு பணிக்கு வரும்போது தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்தி செயல்படுத்தும் விதமாக விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
5. பெண் காவலர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முதலில் காவல் பணியில் ஈடுபடுத்திய முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவாக அவருடைய பெயரில், கலைஞர் காவல் பணி விருதும் கோப்பைகளும் ஆண்டு தோறும் வழங்கப்படும்.
6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெரும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள் குடும்பத் தலைவிகளாகவும் பல கடமைகளை ஆற்ற வேண்டியுள்ள காரணத்தால், அவர்களது குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு விடுப்பு மற்றும் பணியிட மாற்றம் வழங்குவதற்காக உயரதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்படும்.
7. பெண் காவலர்களுக்குத் துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல, தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
8. பெண் காவலர்களின் தேவைகள், பிரச்சனைகள், செயல்திறன் குறித்து ஆலோசனை செய்வதற்காக, காவல் துறையில் பெண்கள் என்ற தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்படும்.
9. பெண் காவலர்கள் தங்கள் பணி முறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்வதற்காக, குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
இந்த அறிவிப்புகள் உங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்” என்ற அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மோனிஷா
பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தமிழக வீரர் உயிரிழப்பு!