ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!

தமிழகம்

ஈஷா யோகா மைய தன்னார்வலர் மாயமான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த திருமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘என் சகோதரர் கணேசன் என்கிற சுவாமி பவதத்தா ஈஷா யோகா மையத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2023 மார்ச் 2-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என்று கேட்டார். அப்போதுதான் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்தேன்.

இந்த சூழலில் கடந்த மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அளித்தார்.

ஆனால் ஓராண்டாகியும் இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மந்தமான விசாரணை நடக்கிறது. எனவே விசாரணையை துரிதப்படுத்தி காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக காவல்துறை உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், “இந்த விவகாரம் தொடர்பாக ஈஷா யோகா மையத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 36 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனினும் காவல்துறைக்கு விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஏற்கனவே ஈஷா யோகா மையத்தில் காணாமல் போன ஆறு பேர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே சென்றுள்ளனர். அவர்களில் 5 பேர் திரும்பி வந்து விட்டனர். ஆனால் மனுதாரரின் சகோதரர் கணேசனை மட்டும் இன்னும் காணவில்லை. சிறிது கால அவகாசம் அளிக்கப்பட்டால் அவரை கண்டுபிடித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவோம்” என்றும் தெரிவித்தார்.

இன்றைய விசாரணையின் போது மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

தொடர்ந்து இந்த வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மக்களவை தேர்தல் : 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் ஏன்?… யுவன் விளக்கம்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *