India defeated England 5th test
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற 4 போட்டிகளில் 3-1 என இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், 5-வது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடர்ந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாக் க்ராலி, ஒரு புறத்தில் இங்கிலாந்துக்கு நல்ல துவக்கம் கொடுத்தாலும், மறுபுறத்தில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழலில் சிக்கி மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதன் காரணமாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிலாந்து ஜாக் க்ராலி 79 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களையும், பென் டக்கெட் 27 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்திய அணிக்காக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்கமே அதிரடியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினர்.
ரோகித் சர்மா 103 ரன்களுக்கும், சுப்மன் கில் 110 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அரைசதம் விளாசினர். இவர்களின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணிக்காக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார், ரவிச்சந்திரன் அஸ்வின். முதல் 10 ஓவர்களிலேயே, அஷ்வினின் சுழலில் சிக்கி ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப் ஃபெவிலியன் அடுத்தடுத்து திரும்பினர்.
அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் பொறுப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தபோதும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம், 5-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்ஸில், அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி, பேட்டிங்கிலும் 30 ரன்களை சேர்த்த குல்தீப் யாதவ், 5-வது போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
தொடரின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி, 9 இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதங்களுடன் 712 ரன்களை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த தொடருக்கான ‘தொடர் நாயகன்’ விருதை கைப்பற்றினார்.
4-1 என தொடரை கைப்பற்றிய இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
–மகிழ் India defeated England 5th test
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs ENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ‘வரலாறு’ படைத்த பவுலர்!
போதைப்பொருள் புழக்கம்: எக்ஸ் பயோவை மாற்றிய எடப்பாடி