இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் – பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டியின் திருமணம் அமர்க்களமாக இன்று (ஜனவரி 23) நடந்தேறியது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் திரையுலக நட்சத்திரங்கள் இடையேயான காதல் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
மன்சூர் அலிகான் பட்டோடி, முகமது அசாரூதின், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாஹீர் கான், ஹர்திக் பாண்டியா, விராட்கோலி போன்ற வீரர்கள் ஏற்கெனவே நடிகைகளை திருமணம் செய்துள்ளனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/kl-rahul-athiya-shetty-marriage-1-620x420.jpg)
அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல். ராகுல்.
இவரும் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான ஆதியா ஷெட்டியும் கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி உறுதி செய்த நிலையில், இவர்களின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் இன்று நடைபெற்றது.
மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இன்று நடந்தேறிய திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரைச் சேர்ந்த மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/kl-rahul-athiya-shetty-marriage-2.jpg)
நியூசிலாந்து தொடரில் 3வது ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் யாரும் கே.எல்.ராகுல் – ஆதியா ஷெட்டியின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் திருமணத்தைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா