மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘Say No To Drugs & DMK’ என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் பிரமுகரான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை திமுக கட்டுப்படுத்த தவறியதாக, பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி தமிழகத்தில் போதை பொருள் தங்கு தடையின்றி கிடைப்பதாக குற்றம் சாட்டினார்.
அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், நேற்று (மார்ச் 8) செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
“ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்திய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மார்ச் 12-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், Say No To Drugs & DMK என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில்,
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.
அதிமுகவின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய எக்ஸ் தளத்தின் முகப்பு பக்கத்தில் “Say No To Drugs & DMK” என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன்.
கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் “Say No To Drugs & DMK” என்ற வாசகத்தை இணைத்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு!
”அவர்கள் இன்னும் உலாவிக்கொண்டு தான் உள்ளனர்” – பா ரஞ்சித் காட்டம்