வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இறுதி அட்டவணையை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஐசிசி ஒருநாள் உலக்க்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான 13வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க இருக்கிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி மொத்தம் 45 நாட்கள் நடைபெறுகிறது.
ஐசிசி உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து ஆகிய அணிகள் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
உலகக் கோப்பையின் இறுதி போட்டியானது நவம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அன்றைய தினம் நவராத்திரி பூஜை நடைபெற இருப்பதால் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக குஜராத் காவல்துறை பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தற்போது மாற்றியுள்ளது.
இதுதொடர்பாக இன்று ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”இந்த ஆண்டு ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட போட்டி வேறு ஒரு நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்ற எட்டு போட்டிகளின் விவரங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் முதலில் அக்டோபர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டு அக்டோபர் 14 சனிக்கிழமை அன்று அதே இடத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்தின் போட்டி அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து இப்போது அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
லக்னோவில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் பெரிய போட்டி அக்டோபர் 13ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 12 அன்று நடைபெறும்.
இதேபோல், பங்களாதேஷுக்கு எதிரான நியூசிலாந்தின் ஆட்டம் சென்னையில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பகல்-இரவு போட்டியாக நடைபெறும்.
நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவில் நடைபெற இருந்த ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்த இங்கிலாந்து vs பாகிஸ்தான் ஆகிய ஆட்டங்கள் நவம்பர் 11 சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல், இங்கிலாந்து பாகிஸ்தான் இடையிலான போட்டி நவம்பர் 12ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 11ஆம் தேதிக்கும், இந்தியா – நெதர்லாந்து இடையிலான ஆட்டம் நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து நவம்பர் 12க்கும் மாற்றப்பட்டுள்ளது” என்று மாற்றப்பட்ட 2023 உலகக் கோப்பை அட்டவணை குறித்து ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுகவை தொட்டார் கெட்டார்… யாரை கூறுகிறார் ஜெயக்குமார்?: கரு நாகராஜன் பதில்!