IPL 2024 : குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் 17வது சீசன் தொடரில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் தனது சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது.
முதல் ஓவரிலேயே டி காக்கின்(6) விக்கெட்டை இழந்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் 7 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து கேப்டன் ராகுலுடன், ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தனர். அவரைத்தொடர்ந்து அரைசதம் கண்ட ஸ்டோனிஸும் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் களமிறங்கிய பூரன் மற்றும் பதோனி ஆகியோரின் அதிரடியால் லக்னோ அணி 163 ரன்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் சுப்மன் கில் – சாய் சுதர்ஷன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில்(19), யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சாய் சுதர்ஷனும் 31 ரன்களில் வெளியேற லக்னோ அணியின் பந்துவீச்சு வேகமெடுத்தது.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களில் தெவாட்டியா மட்டும் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் குஜராத் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
அந்த அணி தரப்பில், அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய யாஷ் தாக்கூர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2வது இடம் வந்துட்டேன் பாத்தியா? : அப்டேட் குமாரு
அதே சத்தம்… மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!