கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி இன்று (மே 6) உயிரிழந்துள்ளனர்.
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 12 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று (மே 5) நாகர்கோவில் வருகை தந்தனர்.
திருமணத்தை முடித்துவிட்டு இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தவர்கள் அங்கு சூரிய உதயத்தை கண்ட பிறகு, காலை 10 மணியளவில் கணபதிபுரம் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த அலையில் சிக்கி பிரவீன் ஷாம், வெங்கடேஷ், சாருகவி, காயத்ரி, நேசி, சர்வ தர்ஷித் ஆறு பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்த சக மாணவர்களும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் கடலுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றனர். நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு நேசி மற்றும் சர்வ தர்ஷித் ஆகியோர் மீட்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மற்ற 4 மாணவர்களும் தீயணைப்பு மற்றும் காவல்துறையினரால் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சர்வ தர்ஷித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில், குமரி கடற்கரை பகுதியில் இயல்பை விட 1.5 மீட்டர் அளவு அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருந்தது.
முன்னதாக தமிழக கடலோர பகுதிகளில் மே 6ஆம் தேதியான இன்று வரை ‘கள்ளக்கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில்தான் படித்த மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக நாகர்கோயிலைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுவாமிநாதன் நாகராஜன் தனது முகநூல் பக்கத்தில், “
கல்வி வேறு… களம் வேறு!
தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. ஆனால் பாடப் புத்தகங்களை படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் குமரி என்றே தொடர்ந்து பேசி வருகிறேன்.
குமரி கடலோரப் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு 1.5 மீட்டர் உயரம் வரை ராட்சச அலை எழும். அதனால் சுற்றுலாப் பயணிகள் கடலில் கால் நனைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை செய்திக் குறிப்பு வெளியிட்டு இருந்தார். ஞாயிற்று கிழமை (நேற்று) செய்தித்தாள்களில் இது பிரதான இடம் பிடித்திருந்தது. ஏற்கனவே நேற்று கடல் அலையில் சிக்கி சிறுமி ஒருவர் குமரி மாவட்டத்தில் இறந்திருந்தார். இரு நாள்களில் கடல் காவு வாங்கியோரின் எண்ணிக்கை இங்கே எட்டு!
இன்று குமரி, லெமூர் கடற்கரையில் ராட்சச அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள்
இறந்துள்ளனர். குறைந்த பட்சம் இவர்களை சார்ந்தோரேனும் செய்தித்தாள் வாசிப்புக்குள் இருந்திருக்கலாம்.
இன்னொன்று குமரியிலேயே கடலுக்கு நுழைவுவாயில் கேட் போட்ட ஒரே சுற்றுலாதலம் லெமூர் கடற்கரை தான். கணபதிபுரம் உள்ளாட்சி அமைப்பு அந்த நுழைவுவாயிலை பராமரிக்கிறது. இருந்தும், கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை.
ஒரு பக்கம் ஆட்சியரிடம் இருந்து, தேசிய மீட்புப் பிரிவின் எச்சரிக்கை அறிவிப்பு வருகிறது. இன்னொரு புறத்தில் லெமூர் கடற்கரையின் கேட் பூட்டப்படவில்லையா? பூட்டியிருந்த பட்சத்தில் அவர்கள் எப்படி உள்ளே சென்றனர்? அப்படி அத்துமீறி சென்றால் அது எவ்வளவு பெரிய தவறு? எப்படிச் சென்று இருந்தாலும் சுற்றுலா தலத்தில் இருந்து எச்சரிக்கை செய்திருக்க வேண்டிய காவலர்கள் பணியில் இருந்தார்களா?
5 பேரின் மரணம் எளிதில் கடக்க வேண்டிய விபத்து செய்தி அல்ல. எச்சரிக்கை செய்வதில் இருக்கும் அக்கறைக்கும், விழிப்புணர்வுக்கும் இடையே இருக்கும் இடைவெளி!
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளஸ் 2 ரிசல்ட்: வெற்றி பெற்ற திருநங்கை மாணவி!
பிளஸ் டூ ஃபெயிலா? கவலைப்படாதே சகோதரா… உனக்கும் ‘கவுன்சிலிங்’ உண்டு!