ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான் தன்னுடைய மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்.
“அணியில் உள்ள இளம் வீரர்களுடன் எனது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். இளம் வீரர்கள் எப்போது என்னிடம் ஆலோசனை கேட்டாலும் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்.
கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், இந்தத் தொடருக்கு கேப்டனாக செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
இந்திய அணியில் அவர் முக்கியமான வீரர்களில் ஒருவர். ஆசியக் கோப்பை போட்டிக்கு முன்பாக அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள இந்தப் போட்டி உதவும்.
இந்தத் தொடரின் மூலம் நிச்சயம் அவர் நிறைய பலன் அடைவார் என்று நம்புகிறேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ள தவான்,
“காயத்தால் வாஷிங்டன் சுந்தர் விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் அணியில் அவர் முக்கியமான வீரர். ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவரை தவற விடுகிறோம்.
ஆனால் காயத்தில் சிக்குவது விளையாட்டின் ஒரு பகுதி. விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது.
கடைசியாக 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே பயணத்தின்போது இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளும் இன்று மோதுவது 64ஆவது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 63 ஆட்டத்தில் இந்தியா 51இல், ஜிம்பாப்வே 10இல் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது.
-ராஜ்
ஜிம்பாப்வே ஒரு நாள் கிரிக்கெட்: தொடக்க வீரராக களத்தில் இறங்கும் கே.எல்.ராகுல்