மதிமுக நிரந்தர சின்னம் பெறும் அளவுக்கு வலிமை பெறும் என்று வைகோ பேட்டி அளித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (மே 6) நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சிக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், லட்டு, பொங்கல், பழங்கள் ஆகியவற்றைத் தொண்டர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து முதன்மைச் செயலாளர் துரை வைகோ இரத்ததானம் வழங்கி, இரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுக முதலில் குடை சின்னம், பிறகு பம்பரம் சின்னம், தற்போது தீப்பெட்டி சின்னம் வாங்கியிருக்கிறது.
பொறுத்திருந்து பாருங்கள் மதிமுக நிரந்தர சின்னம் பெறும். அந்தளவுக்கு இந்த கட்சி வலிமை பெறும்” என்று கூறினார்.
மேலும் அவர், “இப்போது திமுக எங்களை முழுமையாக நம்புகிறது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் எங்களை அன்போடு நேசிக்கிறார். பாசத்தோடு வரவேற்கிறார். இந்த நெருக்கம் இனி இடைவெளிக்கு இடமளிக்காமல் சென்றுகொண்டிருக்கும்.
வடநாட்டில் ஒரு தேர்தலுக்கு ஒரு கட்சி என்று பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால் திமுகவுடன் லட்சியங்களைக் காப்பாற்றுவதற்காக, எதிர்ப்பு சக்திகள், இந்துத்துவா சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காகச் செயல்படும் ஒரு இயக்கம் மதிமுக, நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருப்போம், திமுகவுக்குப் பக்கபலமாக இருப்போம்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
லைகா தயாரிப்பில் அனுபமாவின் புது பட டைட்டில் இதோ..!
கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் பலி!