’ஒரு டிக்கெட் 7,000 ரூபாயா?’: கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!

விளையாட்டு

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரிகளுக்கு அனுமதி பெறப்பட்டு, மைதானம் மேம்படுத்தப்பட்ட நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஐபிஎல் லீக் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியையும், கேப்டன் தோனியையும் காண முடியாமல் காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அதன்படி சேப்பாக்கத்தில் ரசிகர்களின் ஆராவாரத்துடன் கடந்த 3ம் தேதி லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

ருதுராஜின் அதிரடி அரைசதம், தோனியின் அசத்தல் சிக்ஸர்கள், மொயீன் அலியின் அபார பந்துவீச்சு என மைதானத்தில் கண்டுகளித்த ரசிகர்களுக்கு அப்போட்டி முழுக்க முழுக்க விருந்தாக அமைந்தது.

எனினும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டதாக கூறப்பட்ட முதல் போட்டியிலேயே மைதானத்தின் சில கேலரிகள் ரசிகர்கள் இன்றி காலியாக கிடந்ததது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் இந்த முறையும் டிக்கெட் விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிஎஸ்கே – ஆர்ஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட்டை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்த போதும், டிக்கெட் வாங்குவதில் கடும் சிரமம் நிலவியது. அதுவும் விற்று தீர்ந்த நிலையில் கவுண்டரில் டிக்கெட் வாங்குவதற்காக மைதானத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இரவு முழுவதும் தூங்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது 750 ரூபாய் டிக்கெட் சமூக வலைதளங்கள் மூலமாக ரூ.5000 முதல் ரூ.7,000 வரை விற்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் கடந்த 3ம் தேதி நடந்த போட்டியின் போது டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

எனினும் நாளை நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் கள்ளச் சந்தையில் படு ஜோராக நடந்து வருகிறது. இதனையடுத்து டிக்கெட் விற்பனை செய்வதில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தவறிழைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களே சட்டவிரோதமாக சமூக வலைதளங்கள் மூலம் டிக்கெட் விற்பனை செய்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் ரசிகர்களை கோபமடைய செய்துள்ள நிலையில் சமூகவலைதளங்களில் கடுமையாக தங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

நாளை நடைபெற இருக்கும் போட்டியை தொடர்ந்து இன்னும் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே அந்த போட்டிகளிலாவது டிக்கெட் விற்பனை செய்யப்படுவதில் நேர்மையான அணுகுமுறையை நிர்வாகம் கையாள வேண்டும் என்று குரல்களும் எழுந்துள்ளது. இல்லையெனில் ஐபிஎல் தொடரில் இருந்து தவறான நிர்வாக காரணத்திற்காக சென்னை அணியை தடை செய்யுங்கள் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கழற்றிய தனது ’ஷூ’வை உதவியாளரிடம் எடுக்க சொன்ன கலெக்டர்

ஐபிஎல் பாஸ் வேண்டும்: வேலுமணிக்கு , உதயநிதி சுவாரஸ்ய பதில்!

+1
0
+1
3
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *