அதிவேக சதம்.. அதிக ரன்கள்.. சாதனைகளை தகர்த்த தென் ஆப்பிரிக்கா
ODI World Cup 2023, SA vs SL: இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நேற்று (அக்டோபர் 7) நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டாஸ் மட்டுமே இலங்கைக்கு சாதகமாக அமைந்ததே தவிர, அதன்பின் நிகழ்ந்த அனைத்தும் தென் ஆப்பிரிக்காவுக்கே சிறப்பானதாக அமைந்தது.
பவுண்டரிக்கு பறந்த பந்துகள்..
டாஸிற்கு பிறகு பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு, அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் ராஸி வேன் டர் டுஷன் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
12 பவுண்டரி, 3 சிக்ஸ்களுடன் 100 ரன்களுக்கு டி காக்கும், 13 பவுண்டரி, 2 சிக்ஸ்களுடன் 108 ரன்களுக்கு வேன் டர் டுஷனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஐடென் மார்க்ரம் வேறுமாதிரியான ருத்ர தாண்டவத்தை அரங்கேற்றினார். இவரது பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரியை நோக்கி பாய, 14 ஃபோர், 3 சிக்ஸ் என வெறும் 54 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார் மார்க்ரம்.
பின் வந்த ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் தங்கள் பங்குக்கு அதிரடி காட்ட, 50 ஓவர்கள் முடிவில் 428 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
429 ரன்கள் என்ற டார்கெட்டை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசங்கா டக் அவுட் ஆகியும், குஷல் பெரேரா 8 ரன்களுக்கு வெளியேறியும் அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் களமிறங்கிய குஷல் மெண்டிஸ், அணியை அதிரடி பாதைக்கு திருப்பினார். 4 பவுண்டரி, 8 சிக்ஸ் என 42 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழக்க, சரித் அசலங்கா மற்றும் கேப்டன் தசுன் சனகா ஆகியோர் அந்த அதிரடியை தொடர்ந்தனர்.
ஆனால், அசலங்கா 79 ரன்களுக்கும், சனகா 68 ரன்களுக்கும் வெளியேறினர். பின் வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 45 ஓவர்களில் 326 ரன்களை சேர்ந்த இலங்கை அணி, அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தென் ஆப்பிரிக்காவுக்காக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
தனது அதிரடி ஆட்டத்திற்காக, ஐடென் மார்க்ரம் ‘ஆட்ட நாயகன்’ விருது வென்றார்.
ODI World Cup 2023 SA vs SL :தென் ஆப்பிரிக்கா தகர்த்த சாதனைகள் என்ன?
1) 49 பந்துகளில் 100 ரன்களை கடந்த ஐடென் மார்க்ரம், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேகமாக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 2011 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணியின் கெவின் ஓ’பிரைன் 50 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.
2) மேலும், ஒருநாள் உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா அணி பெற்றுள்ளது. முன்னதாக, 2015 உலகக்கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் சேர்த்திருந்ததே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில், ஒரு அணி விளாசிய அதிகபட்ச ரன்னாக இருந்தது.
3) டி காக், வேன் டர் டுஷன் மற்றும் ஐடென் மார்க்ரம் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்காக சதம் விளாசினர். ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில், ஒரு போட்டியில் ஒரு அணிக்காக 3 வீரர்கள் சதம் விளாசுவது இதுவே முதல்முறை.
முரளி
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : 2000 பேர் பலி!
தொடரும் பட்டாசு விபத்துகள்: ஒசூரில் 14 பேர் பலி!