Xதமிழில் கையெழுத்து போடுவோம்: ஆரி

public

தமது அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகத் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தியுள்ளார் நடிகர் ஆரி.

ரெட்டைச்சுழி திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆரி. இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றிப் பல சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திவருகிறார். சமீபத்தில் தனது கையெழுத்தைத் தமிழில் மாற்றியது மட்டுமல்லாமல், பலரையும் தங்கள் கையெழுத்தைத் தமிழில் மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 10) தனது ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை சார்பில் தமிழில் கையெழுத்து போடுவதை வலியுறுத்தி நிகழ்வு ஒன்றுக்கு சென்னையில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, “மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த அமைப்பை நாங்கள் தொடங்கினோம். இயற்கை விவசாயம், மாடித் தோட்டம் எனப் பயணித்துக்கொண்டிருந்தபோது தமிழ் வளர்ச்சிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதன் பின்தான் தமிழில் கையெழுத்து போடுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இது நம் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சி. தமிழ் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பலரும் தங்கள் கையெழுத்தை ஆங்கிலத்தில்தான் போடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது தமிழில் கையெழுத்து போட அவர்களை மாற்றுவதே பெரிய விஷயம்தான். இந்த விழாவுக்காக பலரை நான் அழைத்தபோது இந்த உண்மை தெரிய வந்தது. தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு விழாவுக்கு வருவதாக அவர்கள் கூறினர். நடிப்பை விட்டுவிட்டு உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை எனப் பலரும் எனக்கு அறிவுரை கூறினர். இருப்பினும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இதில் ஈடுபட்டுள்ளேன்.

அடுத்த ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வரை இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராஜவேல், நடிகர்கள் சவுந்தரராஜன், பிளாக் பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழில் கையெழுத்துப் போட்டனர்.

சமீபத்தில், தமிழில் கையெழுத்திடுவது தொடர்பாக உலக மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் ஃபெட்னா விழாவில் நடைபெற்றது. அதனை நடிகர் ஆரி ஒருங்கிணைத்தார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சமீபத்தில் தமிழில் கையெழுத்துப் போடுவதை வலியுறுத்தி தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *