tராமதாஸ் கோரிக்கை: சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி

public

கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியார் மணி மண்டபத்தை நேற்று நவம்பர் 25ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் புடைசூழ வந்து திறந்துவைத்தார்.

திங்கட்கிழமை காலை 7.30 டு 9.00 ராகுகாலம் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை வீட்டிலிருந்து 9.00 மணிக்குப் புறப்பட்டவர், கடலூருக்கு மதியம் 12.00 மணிக்குள் வந்துவிட்டார். 12 மணி வரை எமகண்டம் என்பதால் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வுயெடுத்தவர், விழாவைப் பற்றியும் மக்கள் கூட்டத்தைப் பற்றியும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விசாரித்தார்.

சரியாக 12 மணிக்கு சர்க்யூட் ஹவுஸிலிருந்து புறப்பட்டு வெள்ளி கடற்கரைச் சாலை வழியாக ராமசாமியார் மணி மண்டபத்திற்கு வந்தார், மண்டபம் உள்ளே முதல்வர் மற்றும் துணை முதல்வர் கார் மட்டுமே அனுமதிக்கப்பட்டது,

மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கார்களை அனுமதிக்கவில்லை, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மட்டும் காரை அனுமதிக்கச் சொல்லி போலீஸிடம் வம்படித்து பார்த்தார். ஆனாலும் காரை விடவில்லை.

12.10 மணிக்கு மணி மண்டபத்தைத் திறந்துவைத்துவிட்டு வெளியில் காரில் ஏற வந்த முதல்வரிடம், அமைச்சர் எம்.சி சம்பத் ஓடிச்சென்று ஏதோ சொல்ல, 50 மீட்டர் தூரம் நடந்துசென்றார். வழியில் திருவந்திபுரம் பெருமாள் கோயில் ஐயங்காரர்கள் பூரண கும்பம் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்டு காரில் புறப்பட்டார் விழா மேடைக்கு.

பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா, பன்னீர்செல்வம் – முதல்வரிடம் நெருக்கமாக இருப்பதாகத் தொண்டர்கள் மத்தியில் காட்டிக்கொள்ள முதல்வர் கூடவே சென்று பேசிக்கொண்டு போக, அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னால் நடந்துசென்றார்.

மேடைக்கு த.மா.கா மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ் வெங்கடேசனை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதும், கோபப்பட்ட வெங்கடேசன் எதுக்குயா எனக்கு அழைப்பு கொடுத்தீங்க, எங்களை அசிங்கப்படுத்த அழைத்தீர்களா என்று பேசியவர், பத்திரிகையாளர்களை கூப்பிடுங்கள் சொல்லிவிட்டுப் போகலாம் என்று பேச அதற்குள் கலெக்டர் கவனத்திற்குச் சென்று உள்ளே அனுமதித்தார்கள்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் தந்தை கிருஷ்ணசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து மேடைக்கு அழைத்து அமரவைத்தார்கள்.

பா.ம.க தலைவர் ஜி.கே மணியை யாரும் சரியாக வரவேற்க இல்லாததால் மேடைக்கு முன்பு விஐபி வரிசையில் போய் உட்கார்ந்தார், மேடையிலிருந்து பார்த்த முதல்வர், ஜி.கே.மணியை மேடைக்கு அழைத்தார். , அதன் பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கீழே உட்கார்ந்ததைப் பார்த்து மேடைக்கு அழைத்தார் முதல்வர்.

தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். . அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்துப் பேசியபோது பாமக தலைவர் ஜி.கே.மணி பெயர் சொல்லியபோது, பாமக நிறுவனர் ஜி.கே மணி என்று மாற்றிக் குறிப்பிட்டபோது, இருக்கையிலிருந்த ஜி.கே. மணி வாயில் கை வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சம்பத், “வன்னியர்களுக்கு எங்களைத் தவிர வேறுயாரும் செய்யமுடியாது, இராமசாமி படையாச்சிக்கு சிலைவைத்து மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதிக்கொடுத்து சிறப்பாக மணிமண்டபம் கட்டியிருப்பது எங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான், இன்னும் வன்னியர்களுக்கு நிறையச் செய்யவிருக்கிறார், வன்னியர்கள் சமுதாயம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கவேண்டும்” என்றார்.

அடுத்ததாகப் பேசவந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “பாமக பொருளாளர் ஜி.கே மணிஅவர்களே” என தன் பங்குக்கு அவரது பதவியை மாற்றிக் குறிப்பிட்டபோது, ஜி.கே மணி உதட்டை பிதுக்கியபடி குனிந்துகொண்டார்.

அமைச்சர் சி.வி.சண்முகம், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியபிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்,

“ராமசாமி படையாச்சியாரை சந்திக்க ஒரு பெரியவர் வந்துள்ளார், அப்போது அவரது உதவியாளர், ஐயாவை இப்போது சந்திக்கமுடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளார், உள்ளே இருந்த ராமசாமியாருக்கு குரல் கேட்டு வெளியில் வந்து யார் வந்தது, எதற்குத் திருப்பி அனுப்பினிங்க என்று சத்தம்போட்டவர் இந்த நேரத்தில் வந்தவர் எங்கே போய் தங்குவார், எப்படிப் போவார் அவரை அழையுங்கள் என்று சந்தித்துள்ளார்,. அந்த அளவுக்கு மனிதநேயமுள்ளவர் என்று ராமசாமி புகழைப் பேசியவர், பாமக நிறுவனர் ராமதாஸும், எம்.பி.அன்புமணியும் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்கள் அதை விரைவில் நிறைவேற்றுவேன் என்றார் கோரிக்கை என்னவென்று சொல்லாமல்.

அருகிலிருந்த பாமக விஐபி,யிடம் முதல்வரிடம் ராமதாஸ் என்ன கோரிக்கை வைத்துள்ளார் என்று கேட்டோம். “அது ஒன்றும் இல்லை சார் வன்னியர் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டிருந்தார், அதேபோல நாயக்கன் கொட்டாய் கலவர வழக்கில் பாமக நிர்வாகிகள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. அதைத்தான் இப்படி மறைமுகமாகச் சொல்லுகிறார்” என்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *