]நினைவுக் கட்டுரை: ஞானியும் நானும்!

public

பு.மா.சரவணன்

படக்கதைகள், மாயாஜால கதைகள், அம்புலிமாமா, சித்தர் பாடல்கள், வள்ளலார், சித்த மருத்துவம், தனித்தமிழ் இயக்கம், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, கொஞ்சம் பெரியார் எனக் கழிந்த என்னுடைய கிராமத்துப் பள்ளி வாழ்க்கை முடிந்து, கோவையில் உள்ள கல்லூரியில் 1984இல் தொடங்கியது.

புத்தகங்களே வாழ்க்கை சுவாசம், பரவசம் என இருந்தவனுக்கு கோவையில் உள்ள புத்தகக்கடைகள் கற்பக விருட்சமாகத் தெரிந்தன. பழைய புத்தகக்கடையில், என்சிபிஹெச் கம்யூனிச புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக அறிமுகமான பாபு, “தேவையில்லாம எல்லா புத்தகங்களையும் வாங்காதீங்க. **கோயம்புத்தூரில் பெரிய கம்யூனிச அறிவாளி இருக்கார். அவர் பெரிய இலக்கியவாதியும்கூட. அவரைப் போய் பாருங்க அப்புறம் அவசியமான புத்தகங்களை வாங்கிக்கங்க**” என்றார்.

அடுத்த நாள், கல்லூரி முடிந்து மாலை காட்டூரில் உள்ள ஞானி அவர்களைச் சந்தித்தேன். முதல் மாடியில் ஏறியவுடன் இடப்பக்கத்தில் உள்ள முதல் அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறையெங்கும் புத்தகங்கள், புத்தக வாசனை.

மலர்ந்த புன்சிரிப்புடன் என்னை வரவேற்று உட்காரச் சொன்னார். அவருடைய குரல்வளம் தமிழாசிரியராக இருந்ததாலோ என்னவோ, நல்ல உறுதியான தொனி இருந்தது. (கண் பார்வையை அப்போதுதான் இழந்திருந்த நேரம் என்று எண்ணுகிறேன். ஒரு கண்ணில் மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் இருந்தது. )

பதின்பருவத்துக்குரிய ஆர்வத்துடனும் பரபரப்புடனும் இருந்த என்னை, அறிமுகப்படுத்திக்கொள்ள சொன்னார்.

“பாட புத்தகங்கள் தவிர வேற என்னென்ன புத்தகங்கள் படிச்சிருக்கீங்க?”

முதல் பத்தியில் சொல்லியிருந்த புத்தகங்களை அளவுகடந்த மகிழ்ச்சியுடன் அவரிடம் சொன்னேன்.

“அடேங்கப்பா நிறைய படிச்சி இருக்கீங்க போல இருக்கு. ரொம்ப சந்தோஷம். நீங்க ஏன் சுஜாதா, பாலகுமாரன் படிக்கல?”

“அதெல்லாம் ரொம்ப சுமாரான நாவல்கள்.”

“படிக்காம எப்படிய்யா முடிவு பண்ணுவ?” என்று சிறு குழந்தையைப்போல சிரித்தார். “சரிய்யா, இது வரைக்குமான உன்னோட வாழ்க்கையில நீ சொல்ற கடவுள் எங்கே வர்றாரு? மந்திரம் மாயம் பற்றி உன்னுடைய கருத்து என்ன? ஜோதிடம், எண் கணிதத்தில் உனக்கு ஏன் ஈடுபாடு? தீண்டாமை பற்றி நீ என்ன நினைக்கிற? சாதியைப் பற்றிய உன்னுடைய நிலைப்பாடு என்ன? உங்க ஊர்ல சாதி ஒடுக்குமுறை அதிகமா, குறைவா? பெரியாரை ஏன் புடிச்சிருக்கு? அவருடைய செயல்களில் எது உன்னை ரொம்ப பாதிச்சிருக்கு? ஏன் கம்யூனிஸக் கோட்பாடுகள், மார்க்சியம் பற்றி இதுவரை படிக்கல? ஏன்? ஏன்? ……”

ஆரம்ப ஜோரில் பதில் சொல்லிக்கொண்டே வந்த எனக்கு, சிந்தனை மரபை ஒட்டிய தத்துவார்த்த கேள்விகள் ஆரம்பித்தவுடன் மூச்சு முட்டத் தொடங்கியது.

ஆனால், அன்பான அமைதியான சிரிப்பு தவழ்ந்த முகத்துடன் என்னுடைய உளறல்களை, ஒரு தாத்தாவுக்குப் பேரன் சொல்வதைப் போல் செவிமடுத்து கேட்டுக்கொண்டே வந்தார்.

“சரிய்யா, வள்ளலாரும் சித்தர்களும் எதனால உனக்கு ரொம்ப புடிச்சது?”

“எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும், எல்லாரையும் சமமா நடத்தணும், எல்லோருக்கும் உணவு கிடைக்கணும்.”

“இதைதான்யா மார்க்சியம் சொல்லுது. இதுக்காகத்தான்யா மார்க்சும் ஏங்கல்சும் பாடுபட்டாங்க. அப்புறம் ஏன் அதைப் பற்றியெல்லாம் நீங்க தெரிஞ்சிக்கல?”

இவ்வாறான உரையாடல்களின் இடையே, இந்திராணி அம்மா டீயும் பிஸ்கட்டும் கொடுத்து அன்புடன் என்னை பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார். நான் அங்கு சென்ற காலங்கள் வரையில் இந்திராணி அம்மாவின் மிகுந்த அன்புக்கு உரியவனாகவே இருந்தேன்.

இரண்டாவது மகனான மாதவன் எட்டாவது, ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. இன்று பெரும் கலைஞர் என்று அறிய வருகிறேன். முதல் மகன் பாரி வள்ளலும் அவர் குடும்பமும் சில காலம் கழித்தே பார்த்தது. பாரி ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். திரையுலகில் கடுமையாக முயற்சி செய்தார். நிற்க.

அடுத்தடுத்த நாட்களும் மாலை வேளைகளில் அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்ததோடு, படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றியும், படித்தவற்றில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதுமாக நகர்ந்தது.

ஒவ்வொரு முறை ஞானி ஐயாவைச் சந்திக்கும்போதும், தவறாது அவர் கேட்கும் இரண்டு கேள்விகள்,

**“இன்று என்ன படித்தாய்? எதைப்பற்றி சிந்தனை செய்தாய்?”

முதல் முறை இந்த இரண்டு கேள்விகளை எதிர்கொண்டபோது, எனக்குக் குழப்பமாக இருந்தது. **என்ன படித்தாய் என்பது புரிந்தது. என்ன சிந்தித்தாய் என்றால்?

“என்னையா இது? சிந்திக்காமல் எப்படியா வாழ்ற?”

எப்படி சிந்திப்பது , எதைப் பற்றிச் சிந்திப்பது , எதற்காகச் சிந்திப்பது என்பதைக் கற்றுக்கொடுத்த ஆசான் அவர்.**

வாரத்தில் நான்கைந்து நாட்களாவது மாலை வேளைகளில் ஞானி ஐயா அவர்களுடன் கழியும்.

புத்தகங்கள் வாசித்துக் காட்டுவதும், கடிதங்கள் எழுதுவதும், வந்த கடிதங்களுக்குப் பதில் எழுதுவதும், விமர்சனங்கள் எழுதுவதும், அவருடைய படைப்புகளை எழுதுவதுமாக நாட்கள் சென்றன.

ஜெயராம் என்ற அன்பர் அவருக்கு உதவியாளராக இருந்த காலம் அது. மாலை வேளைகளில் அல்லது கல்லூரி விடுமுறை நாட்களில் என்னால் அவருக்கு ஓய்வு கிடைக்கும்.

‘நிகழ்’ சிற்றிதழ் படைப்புகளைச் சீரமைத்தல், விமர்சனங்கள், கவிதைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிலும், அவருடைய சில படைப்புகளிலும், எழுதுதல் பிரதி எடுத்தல் விவாதித்தல் ஆகியவற்றில் மிக மிக சொற்ப அளவில் 1992 வரை துணை இருந்தேன்.

ஞானி ஐயாவின் தலைமைப் பண்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று, சிறுவரானாலும் அன்புடனும் மரியாதையுடனும் உரையாடும் மேன்மை குணம்தான். யாரானாலும், எத்தகைய கோட்பாடு உடையவரானாலும், மென்மையாக ஆனால், அழுத்தமாக மார்க்சியப் பார்வையில் கேள்விகளை முன்வைத்து மறுக்க வேண்டியதை மறுத்தும், தான் புரிந்துகொள்ள வேண்டியதை இன்னும் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்வார்.

மார்க்சியக் கோட்பாடுகள், பெரியாரின் தேவையும் அவருடைய இயக்க அரசியலும், மண்ணுக்கேற்ற மார்க்சியம் (நிலம் சார்ந்த விழுமியங்களை உள்வாங்கிக்கொண்டு இயங்கும் மார்க்சிய தத்துவ முறை), மார்க்சிய அழகியல், அல்தூசர், கிராம்சி, அந்நியமாதல், பெரியாரையும் மார்க்ஸையும் இணைத்து செயல்பட வேண்டிய அவசியம் (இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளைக் களையத் தடையாக உள்ளது, தீண்டாமையும், சாதிய ஒடுக்கு முறையும்தான். எனவே, இந்திய கம்யூனிஸ செயல்பாடுகள், பெரியார் – அம்பேத்கர் ஆகிய மண்சார்ந்த சிந்தனையாளர்களின் தத்துவார்த்த நிலைப்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்) ஆகியனவும்…

எஸ்.வி.ராஜதுரை, தியாகு, கே.டேனியல், சிவகாமி , திலீப்குமார், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, நகுலன், பிரமிள், ஜி நாகராஜன் அபி, சா.கந்தசாமி, விக்கிரமாதித்தன், ஆத்மாநாம், கோணங்கி, ரமேஷ் – பிரேதன், ராஜ் கௌதமன், சிட்டி, கா.நா.சு, மௌனி, அழகிரிசாமி, தி.ஜானகிராமன், தி.ஜ.ரங்கநாதன், முன்றில் அரங்கநாதன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், கால சுப்ரமணியம், பாவண்ணன், மார்த்தாண்டம் குமார செல்வா, எம்.டி.எம், லா.சா.ரா, கி.ராஜநாராயணன், வெ.‌‌ஸ்ரீராம், தேனுகா, தோப்பில் முகமது மீரான், ஆ மாதவன், பூமணி, சாரு நிவேதிதா, தமிழவன்…

பொற்றேகாடு, வைக்கம் முகமது பக்ஷீர், குறுப்பு, எம் டி வாசுதேவன் நாயர், குஞ்சுண்ணி… Will Durant – the story of philosophy, Nietzsche, Carl G Jung, Sigmund Freud, …..

இன்னும் இன்னும் எனச் சொல்லலாம் எனக்கு அறிமுகப்படுத்திய படைப்புகளையும் படைப்பாளிகளையும்.

குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஆளுமை என்றால், மார்க்சிய அறிஞர் எஸ்.என்.நாகராசன் ஐயாவைத்தான். ஞானி ஐயா வீட்டில்தான் முதலில் சந்தித்தேன். எங்க ஊர் பக்கம் என்பதும், என்னுடைய தாத்தாவை அறிந்தவர் என்ற முறையிலும் மிக நெருக்கமானார். இன்றுவரை அவ்வப்போது அவருடன் தொடர்பு உண்டு.

புத்தக வெளியீடு, இலக்கியக் கூட்டங்கள், விவாதவெளிகளுக்குச் சில நேரம் நான் உறுதுணையாகப் போவதுண்டு. சில நேரம் அவருடைய விமர்சனக் கட்டுரைகளை மேடைகளில் நான் வாசிக்கும் வாய்ப்பும் அவர் கொடுத்தார். கௌதம சித்தார்த்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு குறித்த ஞானி ஐயாவின் விமர்சனத்தை உடுமலை பள்ளி ஒன்றில் நான் மேடையில் வாசித்தேன். அதேபோல ஜெயமோகன் படைப்புகளையும். ஞானி ஐயாவைச் சந்திக்க வரும் படைப்பாளிகளில் சிலர் எனது அறையில்‌ தங்கும் வழக்கமும் உண்டு.

ஒருமுறை புதுச்சேரியில் லாட்ஜில் தங்கிக்கொண்டு ராஜ் கௌதமனிடம் வந்திருப்பதாக தொலைபேசினேன். கால்மணி நேரத்தில் நான் இருந்த விடுதிக்கு வந்து என்னிடம் விடுதியில் தங்கியதற்காகக் கோபித்துக்கொண்டதோடு, ஞானி ஐயா நான் புதுச்சேரி வருவதைப் பற்றி கடிதம் எழுதி இருந்ததாகவும், நான் வெளியில் தங்கினால் அவர் என்ன நினைப்பார் என்று கடிந்துகொண்டார்.

விடுதி அறையை காலி செய்து, அவர் வீட்டில் நான்கு நாட்கள் நல்ல உபசரிப்போடு தங்கி இருந்தேன்.

பிறிதொரு நேரம் புதுச்சேரியில் ரமேஷ் பிரேம் ஆகியோருடன் சுமார் ஐந்து நாட்கள் தங்கி இருந்தபோதும், ஞானி ஐயாவின் மீது ராஜ் கௌதமன், ரவிக்குமார், பிரேம், ரமேஷ், மாலதி போன்றோர் வைத்திருந்த மரியாதையும் அன்பும் இன்றும் நினைவில் உள்ளது.

அதேபோல சி.சு.செல்லப்பா நினைவு நிகழ்ச்சிக்கு மதுரைக்கு ஞானியான ஐயாவை அழைத்துச்சென்றது. மிக முக்கியமாக திருச்சியில் நடந்த எண்பதுகளில் கலை இலக்கிய அரசியல் மாநாடு நிகழ்ச்சிக்கு ஞானி ஐயாவுடன் சென்றது, இன்னும் என்னைச் செம்மைப்படுத்தியது. பொதுவில் அவரை அழைத்துக்கொண்டு செல்வதைப் பற்றி நான் கூறினாலும், இலக்கிய சமூகப் பொருளாதாரத் தத்துவம் சார்ந்த உரையாடல்களில் இன்னும் கொஞ்சம் நான் விசாலமானேன் என்பதுதான் உண்மை. நெருக்கமான நண்பர்கள் வட்டம் அனைவருக்கும் ஞானி ஐயாவே காரணம். எண்பதுகளில் எனது அடையாளம் ஞானியின் ஆள் என்பதாகவே இருந்தது.

அவரை முதன்முதலில் நான் சந்தித்த காலத்திலிருந்து தொடர்பு இருந்த காலம் வரை, அவரின் மேல் எனக்கு உள்ள பேராச்சரியமான விஷயம் என்னவென்றால் அவராகவே நீட்டாக ஷேவ் செய்து கொள்வதும், எப்பொழுதும் சுத்தமாக உடை அணிந்து கொள்வதும்தான். புறக்கண்ணில் தான் பார்வையில்லையே தவிர, அகப்பார்வை அவருக்கு வெகுதெளிவு.

வயது வித்தியாசம் தாண்டி என்னை வாயா, போயா என்றுதான் சில நேரம் பேசுவார். ஒருமுறை மா.அரங்கநாதனின் வீடுபேறு படைப்பினை, ஏற்ற இறக்கத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நக்கலாக சிரித்தவாறு என்னையா நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் படம் ஏதாவது பார்த்தியா? அப்பப்ப உனக்கு குசும்புத்தனம் வந்துரும்யா. சும்மா படிங்க.”

நாகார்ஜுனனின் மொழிபெயர்ப்பில் வந்த சிறு புத்தகம், அரசு அறிவு அதிகாரம். என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று. சென்னையில் நாகார்ஜுனனின் மயிலாப்பூர் வீட்டில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்தப் புத்தகத்தின் பத்திகளை வரிக்கு வரி விவாதித்து புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். அதேபோல எஸ்.வி.ஆர் அவர்களிடமும் பெரியார் மார்க்சியம் தொடர்பான விஷயங்களை என்னளவில் விவாதித்தேன். அதேபோல பிரமிள் உடன் திருவான்மியூரில் தொடர்ந்து 4, 5 நாட்கள் சென்று கவிதை, கவிதை உலகம் மற்றும் பொது விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த மூன்று நிகழ்ச்சிகளும் வெவ்வேறு காலகட்டங்கள்.

பின்னர் ஞானி ஐயாவைச் சந்தித்து உரையாடும்பொழுது, மேற்குறித்த சந்திப்புகளைப் பற்றி பேசும்போது, அவர், **“நான் பேசியது என்ன பொருள் பற்றி, அவர்கள் என்ன பதில் சொன்னார்கள், நீ அதை எவ்வாறு புரிந்துகொண்டாய், ஏன் உனக்கு இந்த சந்தேகம் வரவில்லை, ஏன் நீ இதை பற்றிக் கேட்கவில்லை, இந்த விவாதங்களினால் நீ என்ன முடிவுக்கு வந்தாய்” என்ற கேள்விக் கணைகளால் தொடுப்பார்.**

ஈழத் தமிழர்களுக்காக எண்பதுகளில் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நடந்த போராட்டத்தில் அவர் பங்குகொண்டதுண்டு. அவரை அழைத்துச் செல்ல வீட்டுக்குப் போனபோது, சிறு வாலிபனை போல குஷியாகத் தயாராக இருந்தார். இன்னும் சொல்ல கோடி விஷயங்கள் இருக்கு.

தமிழ், தமிழர், தமிழ் மண் சார்ந்த பொதுவுடமைத் தத்துவம், அதன் அழகியல் சார்ந்த இலக்கியப் படைப்புகள் என்றே இயங்கினார். வீட்டில் உள்ள அம்மாதான், தன் குழந்தைகளுக்குப் பல்வேறு கதைகளைச் சொல்லி வளர்ப்பாள். அந்தக் கதைகளில் பொதுவுடமை கதைகள் சேரும் காலம், மண்சார்ந்த பொதுவுடமைத் தத்துவம் உருப்பெற்று வெற்றி பெறும் என்று நம்பினார்.

**84களிலிருந்து 92 வரை அவருடனான எனது உறவு, அப்பாவாக, நண்பராக, சகோதரனாக, சக இலக்கிய தோழனாக இருந்தது. வருடத்தில் சற்றேறக்குறைய 250 நாட்கள் அவரை சந்தித்து உரையாடியதாக இருக்கும். படித்துக் காட்டியது, எழுதிக் கொடுத்தது, அழைத்துச் சென்றது என்று அவர் எனக்குப் பணிந்தது என் வாழ்நாளின் ரத்தினங்கள் ஆக இருக்கும்.** அவரின் கருத்துகளாக நான் எழுதியதில் பிழை ஏதாவது இருப்பின் அது என்னுடைய புரிதலின் போதாமையாக கொள்க.

என்னுடைய இயலாமை, சூழ்நிலையால் 1992 இறுதியில், மீண்டும் அவரைச் சந்திக்க வருவதற்கு சில காலம் ஆகும் என்று அவரிடம் கூறியபோது, எனது கையை இறுகப் பற்றிக்கொண்டு வருடியவாறு “சீக்கிரம் வாயா” என்றார். இன்றுவரை அவரைச் சென்று பார்க்கவோ பேசவோ இல்லை. அது இனிமேலும் இல்லை.

“இன்று என்ன படித்தாய்? எதைப்பற்றி சிந்தனை செய்தாய்?”�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *