mவிரைவில் கரூரில் தினகரன் பொதுக்கூட்டம்!

public

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பகல் 12 மணிக்கு அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேநேரம் டிடிவி தினகரன் அமமுகவின் அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பழனியப்பனைத் தொடர்புகொண்டார்.

“உடனே கரூர் செல்லுங்கள். செந்தில்பாலாஜியோடு போன நிர்வாகிகள் எத்தனை பேர் என்று கணக்கெடுங்கள். இன்று மாலையே கரூர் மாவட்ட நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டுங்கள். நீங்கதான் இப்போதைக்கு கரூர் பொறுப்பாளர்” என்று சொல்ல அடுத்த சில நிமிடங்களில் கரூர் அமமுக மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டிருக்கிறார் பழனியப்பன்.

இதையடுத்து கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் செந்தில்பாலாஜிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உடனடியாக ஒரு மண்டபத்தில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் பழனியப்பன். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் வந்திருக்கிறார்களா என்று கணக்கெடுத்தார். மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் வந்திருப்பதாகக் கூறினார்கள்.

அதன்பின் நிர்வாகிகளிடம் மைக்கைக் கொடுத்து நீங்களே உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று கூறினார் பழனியப்பன்.

“அண்ணா… அவர் மாவட்டச் செயலாளரா இருக்கும்போது கூட்டம் நடந்தால் சிரிக்கக் கூட முடியாது. அவ்வளவு ஸ்ட்ரிக்டா இருப்பார். அவர் போகட்டும். நாங்க எல்லாரும் டிடிவி சாரோடதான் இருக்கோம். இப்பதான் வெடி வெடிச்சிட்டு வந்தோம்” என்றார் ஒரு மாவட்டத் துணை நிர்வாகி.

“இந்த மாவட்டத்துல 2,400 நிர்வாகிகளை நியமிச்சிருக்கணும். ஆனால், அவர் நூற்றுக்கும் குறைவான நிர்வாகிகளையே நியமிச்சிருந்தார். அவர்கள்ல கூட பல பேர் அவர் கூட போகலை. முந்தா நேத்து நைட்டு 12 மணிக்கு எனக்கு வாட்ஸ் அப் கால்ல வந்தார் செந்தில்பாலாஜி. ‘நீங்க என் கூட வந்துடுங்க. உங்களுக்கு என்ன பதவி வேணுமோ நான் பாத்துக்குறேன். நல்லா யோசிச்சு எனக்கு காலையில சொல்லுங்க’னு கேட்டார். நான் வரலைனு சொல்லிட்டேன்” என்றார் வழக்கறிஞரான ஒரு நிர்வாகி.

மேலும் ஒருவர், “ அண்ணே எதிரிகளின் மற்றும் துரோகிகளின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் மிக விரைவில் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் மிகப் பிரமாண்டமான ஒரு பொதுக் கூட்டம் நடத்திக் காட்ட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்குப் பலரும் கரவொலி எழுப்பி வரவேற்க, இதை தினகரனிடம் சொல்வதாக உறுதியளித்தார் பழனியப்பன்.

இப்படிப் பலரும் கருத்துச் சொல்ல அதன் பிறகு பேசிய பழனியப்பன், “செந்தில்பாலாஜியிடம் இருந்த உறுப்பினர் விவரங்களை விரைவில் கேட்டுப் பெறுவோம். அவர் நியமிக்காமல் விட்ட நிர்வாகிகளை விரைவில் நியமிப்போம். ஒருவர் போனால் நம் கழகத்துக்கு ஒன்றும் ஆகிவிடாது. விரைவில் தினகரன் கரூர் வருவார்” என்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். அதேநேரம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் செய்துவிட்டுப் புறப்பட்டார்.

இந்தக் கூட்ட விவரங்களை விரிவாகப் பதிவு செய்து தினகரனுக்கும் அனுப்பியிருக்கிறார் பழனியப்பன்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *