iகொடநாடு கொலை; மூன்று கோணத்தில் விசாரணை!

public

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரசித்து வாழ்ந்து வந்த, ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலையில் தனியார் பாதுகாவலர் கொல்லப்பட்டும், இன்னொருவர் கை வெட்டப்பட்டும் கிடந்த தகவல் குளிர்ச்சியான ஊட்டியையே சூடாக்கிவிட்டது.

24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோத்தகிரி போலீஸுக்கு வந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து உடனடியாக கொடநாடு எஸ்டேட்டுக்கு விரைந்தனர்.

அங்கே ஓம் பகதூர் என்ற தனியார் பாதுகாவலர், அவரது செக்யூரிட்டி அறையில் பிணமாக தூக்கில் இடப்பட்டிருந்தார். மற்றொரு செக்யூரிட்டியான கிருஷ்ணா பகதூர் கை வெட்டப்பட்டு துடித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணா பகதூரை உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீஸ், அவருக்கு மருத்துவமனையில் கடும் பாதுகாப்பு அளித்துள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. பாரியும், நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பாவும் தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

ஜெயலலிதா மரணத்தின் மர்மமே இன்னும் விலகாத நிலையில் அவரது எஸ்டேட் காவலர் மர்ம மரணம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுபற்றி கொடநாடு எஸ்டேட் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கொடநாடு எஸ்டேட்டுக்குள் கறுப்புப்பணம் பெருமளவில் பதுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் மலை மாவட்டம் முழுவதும் சில மாதங்களாகவே பரவிக் கிடக்கிறது. இந்நிலையில், இம்மலைப் பகுதியில் நடமாடிவரும் மாவோயிஸ்டுகள் எஸ்டேட்டுக்குள் பணம் இருக்கலாம் என்று கருதி கொள்ளையிட வந்தபோது, இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும், இன்னொரு கோணத்தில் செக்யூரிட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. அதனால்தான் கை வெட்டப்பட்ட செக்யூரிட்டியை பாதுகாப்போடு விசாரித்து வருகிறார்கள் போலீஸார்.

மூன்றாவது கோணமாக… கொடநாடு எஸ்டேட்டுக்குள்தான் ஜெயலலிதாவின் உயில் இருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இந்த கொலை நடந்திருக்குமோ என்றும் விசாரணை நடக்கிறது” என்றனர்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் சிசிடிவி கேமரா பொருத்த அனுமதிக்கவில்லையாம். தனது பிரைவசியை பாதுகாக்க அவர் சிசிடிவி கேமராவை அனுமதிக்கவில்லை என்கிறார்கள். அதனால் எஸ்டேட்டுக்கு வெளிப்பகுதியில் இருந்து கிடைத்திருக்கும் சிசிடிவி பதிவுகளை வைத்து துப்பு கிடைக்குமா என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் போலீஸார்.

இதுகுறித்து நேற்று மின்னம்பலத்தில் வெளியான செய்தி:[கொடநாடு மர்ம கொலையில் நீதி விசாரணை தேவை: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2017/04/24/1493039331)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *