குண்டர் சட்டம் பாயும்: ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை!

public

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி சாலையில் இருக்கும் நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சைமன் ஹெர்குலஸ் கொரோனாவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியினர் நடத்திய தாக்குதலில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்த 21 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, அண்ணாமலை, நிர்மலா, ஜோசப், ஆனந்தராஜ், சோமசுந்தரம், சுரேஷ், சங்கீத ராஜ், சங்கர், விக்னேஷ் குமார், நாகேந்திரன், பால்ராஜ், விஜய், குமார், இளங்கோ, லோகேஸ்வரன், செந்தில்குமார், கோபிநாத், சாரங்கபாணி, மணிகண்டன், காதர்மொய்தீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் புகைப்படங்களையும் விவரங்களையும் சென்னை காவல்துறை இன்று வெளியிட்டது.

இதனிடையே, ராயபுரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்ற குற்றவாளிகளையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவிலிருந்து நம்மைக் காக்கப் போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *