மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க பரிசீலனை: முதல்வர்!

public

நாகப்பட்டினம் – ஒரத்தூரில் ரூ.367 கோடி மதிப்பில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 7) அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகை என 11 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நாகை மாவட்டத்தில் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியை ஒரத்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்பகுதியில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் திருவாரூர் அல்லது தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளுக்குத் தான் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், என்று வலியுறுத்தினர். அதோடு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறை அருகே நீடூரில் நடைபெற்ற பாமக தெற்கு ஒன்றிய பொதுக்குழுவில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரத்தூரிலேயே மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ். மணியன் அழுத்தத்தின் பேரில் ஒரத்தூருக்கு மருத்துவக் கல்லூரி வந்து விட்டதாக மயிலாடுதுறை மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்துள்ளார்.

மேலும் மயிலாடுதுறை வட்டத்தில், 72 லட்சம் ரூபாயில் நூலகம் அமைக்கப்படும். வேதாரண்யம் ஏரியில் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். கஜா புயலால் பாதித்த கைலாசப்பட்டி கிராம மக்களுக்கு ரூ.49 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். அகஸ்தியன் பள்ளி கிராமங்களில் 29.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்” என்று பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி.

**-கவிபிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *