கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உலகம் முழுவதும் இதுவரை 2,765 பேர் உயிரிழந்துவிட்டனர். பரவி வரும் நோயை கட்டுப்படுத்த முடியாமல், சீனாவும் அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் போராடிக்கொண்டிருக்க, தற்போது ஈரானும் தங்கள் நாட்டில் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகிறது.
இதுவரை ஈரானில் 95 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்க, 16 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர். ஆனால் சொல்லப்பட்டதற்கு மிக அதிகமானவர்கள் ஈரானில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை ஈரான் அரசு மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுடன் மிகப்பெரிய வணிகத்தொடர்பை கொண்டுள்ளது ஈரான். மேலும் உலகின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் இருப்பதால், பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். எனவே நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். அவர் பேசும் போது அதிக அளவில் வியர்த்துக்கொட்டி, இருமிக்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போலவே காணப்பட்டார்.
இந்திலையில் செய்தித் தொலைகாட்சி ஒன்றில் காணொளி மூலம் பேசிய ஈராஜ், தான் புதிதாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இதிலிருந்து கண்டிப்பாக குணமாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். இன்னும் சில வாரங்களில் ஈரான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஈராஜ்.
சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஈரானில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சுகாதார அமைச்சருக்கே கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது சாமானிய ஈரானியர்களின் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
**-பவித்ரா குமரேசன்**�,