[வாடகைக்குப் போகும் இந்திய தாய்மை!

public

இன்றைக்கு நாம் வாழ்ந்துவரும் உலகில் கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அன்றாடப் பயன்பாடுகளுக்குள் வந்துவிட்டஅத்தனையுமே விலை நிர்ணயத்துக்கு கீழும் வந்துவிடுகிறது. ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடும் ஒரு தேசத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கூட ஒரு விலை உண்டு. ஆனால்ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் கருவுக்கு விலை உண்டு என்றால் நம்புகறீர்களா நீங்கள்?

அந்தக் கருவைச் சுமக்க அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கும் விலை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா உங்களால்? பிரசவத்தின் போது அவள் உணரும் உணர்வுகள்,அனுபவிக்கும் வலி, அவளின் தாய்மை என எல்லாவற்றிற்கும் ஒரு எம்.ஆர்.பி. ஸ்டிக்கர் ‘தேவையின்’ அடிப்படையில் ஒட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா உங்களால்?அப்படியானால் சபாஷ்! நீங்கள் இந்த உலகின் முழுமுதல் ‘நாகரீக’ அறிவியல் மனிதராக மாறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆம்.இன்று அதுதான் நிலைமை. வாடகைத் தாய்களின் எண்ணிக்கையும்,வியாபாரமும் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என்றுஇந்திய அரசு இப்போதுதான் இந்தப் பிரச்சனைகளைச் சட்டப்பூர்வமாக முறைப்படுத்தும் (அ) குறைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. ஆரம்பக்கட்ட அளவில் இருக்கும்சட்டப்பணிகளுக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்தியச் சட்டப்படி, இந்தியத் தம்பதிகள் (அ) இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட,வெளிநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மட்டுமே இந்தியாவில் வாடகைத் தாய்களைக் கொண்டு பிள்ளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டுஎன இந்தியா சட்டம் இயற்றி இருக்கிறது. அதேபோல் பலமுறை ஒருவர் வாடகைத் தாயாக இருப்பதையோ, 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபடுவதையோ சட்டம்தடுக்கிறது.

எதனால் இப்படி ஒரு சட்டம்?

‘வாடகைத் தாய்’ முறை என்பது உலகம் முழுவதும் இருக்கும் ஒருமுறைதான். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள்,இனப்பெருக்கத் தன்மையை இழந்தவர்கள், மருத்துவக்காரணங்களுக்காகக் கருத்தரிக்க முடியாதவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையாகத்தான் இந்த முறை அறிமுகமாகியிருந்தது. கிட்டத்தட்ட அதேநோக்கத்திற்காகத்தான் இன்றும் அந்த முறை நீடிக்கிறது. ஆனால் ‘வாடகைத் தாயாக’ இருக்க ஒத்துக்கொள்வது எதனால்? அதுவும் இந்தியா போன்ற பல்கிப் பெருகியமக்கள்தொகை உள்ள ஒரு நாட்டில் எப்படி இதற்கு அதிக பேர் ஒத்துக்கொள்கிறார்கள்? எதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் ஒரு பெண் வாடகைத் தாயாக இருக்கஉடன்படுகிறார்?

வறுமை! அதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

அதனால்தான் தாய்மையும், கருவுறுதலும் புனிதமாக கருதப்படும் ஒரு நாட்டில் இன்று தாய்மை வாடகைக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அடிமாட்டு விலைக்கு நடக்கும் மருத்துவ பேரம், மருத்துவ விதிகளில் உள்ள குறைபாடுகள், வறுமையின் பொருட்டு இதற்காகத் தயாராக இருக்கும் மிகப்பெரிய’பெண்கள் சந்தை’, எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிர்களின் மதிப்பின் மீது நமக்கு இருக்கும் அலட்சியம்.இவற்றை ஆதாரமாகக் கொண்டு வெளிநாட்டினர் இந்தியாவிற்குவாடகைத்தாய்களைத் தேடி படையெடுக்கின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு வாடகைத் தாய்க்கு கொடுக்கப்படும் தொகை $15,000 -$20,000- க்குள் இருக்கும்.இந்தியமதிப்பில் சொன்னால் சில லட்சங்கள். இதுவே சிலருக்கு மலைப்பாய் இருக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் கொடுக்கப்படும் தொகையில் பத்தில் ஒரு பகுதிதான் அது.

பெண்களின் கருப்பை மேல் நடக்கும் இந்த வியாபாரம் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல நூறு கோடிகளுக்கு நடக்கிறது. ஆனால், அதைப்பற்றிய எந்த ஒருபுள்ளிவிவரமும், தெளிவான தகவலும் நம்மிடம் இல்லை. இந்த வியாபாரத்திற்காக உருவாகி, பரவிவரும் கள்ள ஏஜென்டுகள் அடிக்கும் உயிர்க்கொள்ளையின் விலைகோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது.

சமீபகாலமாகத்தான் இதைப்பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளிலிருந்து நமக்குத் தெரியவரும் ஒரு பேருண்மை வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும்பெண்களுக்கு தங்களிடம் ஏஜென்டுகள் கையெழுத்து வாங்கும் ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறது என்றுகூட தெரியாது என்பதுதான். எந்த விழிப்புணர்வும் இல்லாமல் தங்கள்உயிருக்கே ஆபத்தான முடிவுகளுக்கு கூட உடன்பட்டுத்தான் அவர்கள் கையெழுத்திடுகிறார்கள்.

வாடகைத் தாயை ஒப்பந்தம் செய்பவர்கள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடது என்பதில் கண்ணும்கருத்துமாக இருப்பார்கள்.இதற்காக ஒப்பந்தம் செய்யப்படும்பெண்ணிடம் பல்வேறு மருத்துவ சோதனைகள் செய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு அந்த பெண்ணின் உடல்நிலை என்னஆகிறது? அவர்களுக்கான மருத்துவ பாதுகாப்பு என்ன என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். ஒரு மூன்றாவது மனிதராக இருந்து நாம் கொள்ளும் கவலைகூட அவர்களைப்பற்றி அவர்களுக்கே கிடையாது. ஏனென்றால் ‘சும்மா’ இருப்பதற்கு இதைச் செய்தால் குடும்ப நிலைமையையாவது சமாளிக்கலாமே என்கிற நிலையில்தான் அவர்கள் இந்தவியாபாரத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் இரண்டு முரண்பட்டக் குரல்களில் இருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு குரல் வணிக ரீதியிலான கருத்தரிப்புகளை தடை செய்ய வேண்டும் என வழக்குதொடுத்துள்ள ஜெயஶ்ரீ வாத் அவர்களுடையது. இன்னொன்று இந்தத் தொழிலில் மருத்துவராக பணியாற்றும் சந்தீப் மானே உடையது.

தாய்மை என்பது இந்தியாவில் புனிதமானது. அதை பணம் செய்யும் வியாபாரமாக மாற்றுவதை ஏற்கமுடியாது” என்கிறார் ஜெயஶ்ரீ.

“இங்கே பல பெண்கள் இதற்கு தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதன் மூலம் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் அவர்கள் எத்தனைக்குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்ய நாம் யார்?” என்கிறார் மானே.

ஆனால் இதில் நாம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னர் இன்னொரு குரலையும் கேட்டுவிடவேண்டும். வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொண்ட மும்பையைச் சேர்ந்த லட்சுமியின் குரல் அது. அவருடைய குடிகாரக் கணவன் அவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுச்சென்றுவிட்டார். 30 வயதான லட்சுமி தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரப்பெண் வாடகைத் தாயாக மாறி பணம் ஈட்டியதைப் பார்த்து இந்தப் பணிக்கு வந்துள்ளார்.

லட்சுமி கூறுகிறார், ” இதில் வரும் பணத்தைக்கொண்டு என் பிள்ளைகளுக்கு ஒரு சின்ன வீடும்,நல்ல கல்வியும் கிடைத்தால் அதுவே எனக்குப் போதும்”.

அவருடைய பதிலிலுள்ள ‘எனக்குப் போதும்’ என்பதைக் கவனித்தால் நம்மால் ஒருமுடிவுக்கு வரமுடியும்.

ஏனென்றால் மனிதப்பிறப்பு வறுமையின் பொருட்டு வாடகையில் நிகழக்கூடாது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *