நமக்குள் ஒருத்தி: இடம் மாறும் ஆண், பெண் அடையாளங்கள்!

public

நவீனா

அசுரனும் அழகியும் (Beauty and the Beast) என்று பழங்காலந்தொட்டு வந்த கதை ஒன்றைத் திரைப்படமாகவும், வாய்வழிக் கதையாகவும் குழந்தைப் பருவத்தில் பெரும்பாலானோர் பார்த்தும் கேட்டும் இருப்போம். மரியன் ஏங்கல் (Marian Engel) எழுதிய ஐந்தாவது நாவலான ‘பேர்’ (Bear), அதாவது கரடி எனத் தலைப்பிடப்பட்ட நாவலிலும் கிட்டத்தட்ட அதே கதைதான்.

கனடாவில், வடகிழக்கு ஆண்டாரியோவில் உள்ள மலைப்பிரதேச நூலகம் ஒன்றிற்கு வேலைக்குச் செல்லும், லூ (Lou) என்னும் பெண், அந்த நூலகத்தின் காலஞ்சென்ற உரிமையாளரான கர்னல் கேரியின் செல்லப் பிராணியாக இருந்த கரடி ஒன்றைச் சந்திக்கிறாள். முழுவதும் தனிமையில் இருக்கும் லூ பல புத்தகங்களைப் படித்தும், அங்கு அதுவரை அந்தக் கரடியை கவனித்துவந்த ஒரு பெண்ணின் உதவியுடனும் அந்தக் கரடியின் நம்பிக்கையைப் பெறுகிறாள்.

இருவரும் நெருக்கமாகி, இருவருக்கிடையில் காதல் போன்ற ஒருவித உணர்வு ஏற்பட, லூவும் கரடியும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர். அந்தக் கரடியுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் லூ, அந்தக் கரடி போலவே மாற முயற்சி செய்கிறாள். அதனோடு சேர்ந்து நீரின் அடி ஆழத்தில் நீங்குவது, மரத்திலிருந்து பழங்களைப் பறித்து உண்பது, காடுகளில் சுற்றித் திரிவது என ஒரு மிருகத்தின் அனைத்துப் பண்புகளையும் அடையப் போராடுகிறாள்.

ஒருமுறை அவள் முதுகில் அந்தக் கரடி பலமாகக் கிழித்துவிடும், ரணம் மிக ஆழமாக இருக்கும். இருந்தபோதும் ஒரு மிருகமாகவே தன்னையும் நினைத்துக்கொண்டு, ஒரு மிருகத்திற்கு அடிபட்டால் எவ்வாறு நடந்துகொள்ளும் என்றவாறு சிந்தித்துக்கொண்டிருப்பாள். அந்தக் காயத்தின் வலியை, கரடி தனக்கு அளித்த பரிசாக எண்ணி மகிழ்ச்சி அடைவாள்.

இறுதியில் இருவரைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் அந்தக் கிராமம் எங்கும் பரவி, கிராமத்துப் பெரியவர்கள் வந்து அவர்கள் இருவரையும் பிரித்து வைத்துவிடுவார்கள். லூவை அவளது சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பி வைத்துவிடுவார்கள். கனடாவில் எழுதப்பட்ட நாவல்களிலேயே அதிகம் சர்ச்சைக்குள்ளான நாவலாக இன்றுவரை இது கருதப்படுகிறது.

**ஆண், பெண் குண இடமாற்றங்கள்**

இந்த நாவலை விளக்க முற்படும் ஆய்வாளர்கள் முன்வைக்கும் ஒரு முக்கிய விவாதம் என்னவென்றால், மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தின் குணமும், மிருகத்துக்குள் இருக்கும் மனிதனின் குணமும் தூண்டப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இயற்கையில் நிகழ்ந்த ஓர் உறவாகவே, லூ – கரடியின் வாழ்வை பார்க்க முற்படுகிறார்கள். கார்ல் யுங் (Carl Jung) அனிமா (Anima) மற்றும் அனிமல்ஸ் (Animus) காம்ப்ளக்ஸ் என்னும் கோட்பாட்டின்படி, மனிதனுக்குள் மிருகத்தின் குணம் மட்டுமல்லாமல், மனிதனுக்குள் மற்ற அல்லது அடுத்த பாலினத்தின் கூறுகளும் இருக்கின்றன என்று விளக்குகிறார். ஓர் ஆணுக்குள் அவனை அறியாமலேயே உறைந்து கிடக்கும் பெண்ணுக்குரிய குணங்களை அல்லது அம்சங்களை அனிமா காம்ப்ளக்ஸ் என்றும் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆணின் குணங்களை அனிமஸ் காம்ப்ளக்ஸ் என்றும் அழைக்கிறார்.

இவ்வாறாக கார்ல் யுங் கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர் ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் ஆணும் அடங்கியிருக்கிறார்கள் என்பது உளவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெண்ணியம் பற்றிய விவாதங்களில் பலரும் LGBTக்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு எல்லாம் பெண்ணியம் தேவைப்படாது, ஏனெனில் அவர்களுக்குள் பாலின வேறுபாடு உருவாக வாய்ப்புகள் கிடையாது. இருவரும் ஒரே பாலினம் ஆகவோ அல்லது மூன்றாம் பாலினமாக இருப்பதால் பாலினம் சார்ந்த பிரச்சினைகளுக்கு வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறுவார்கள். கார்ல் யுங்கின் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மற்ற பாலினத்தின் குணங்களும், குறியீடுகளும் அடங்கியே இருக்கின்றன. உதாரணமாக, ஒரு லெஸ்பியன் ஜோடியில் இருவருமே பெண்ணாக இருந்தபோதும், அதில் ஒருவரிடம் அவருக்குள் இருக்கும் ஆணின் குணம் அதிகமாக வெளிப்படும், மற்றவரிடம் ஒரு பெண்ணுக்கான இயல்பான குணங்கள் மட்டுமே வெளிப்படும். LGBTக்கள் தங்கள் இணையைக் குறிப்பிடும்போது, ‘அவள் என் கணவர்’, ‘அவன் என் மனைவி’ என்று வேறுபட்ட பால் இனத்திற்கான குறியீடுகளைப் பயன்படுத்தி அவர்களை அறிமுகப்படுத்துவதையும் பார்த்திருப்போம்.

பல லெஸ்பியன்கள் தனது பெண் இணையை, ‘அப்பா’ என்றும், தனது ஆண் இணையை, ‘அம்மா’ என்றும்கூட அழைப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆண், பெண் பாலின வேறுபாடுகளைக் களைவதற்கான அடிப்படைப் புரிதல் அவசியமாகிறது. ஒரே பாலினமாக இருந்தபோதும்கூட, அவர்களுக்குள்ளிருந்து வெளிப்படும் மற்றொரு பாலினத்திற்கு அடையாளங்களையும், குணங்களையும் அவர்கள் தினமும் சந்திக்க வேண்டிய சூழல்தான் அவர்களுக்கும் இருந்துவருகிறது. அந்த இணையில் ஒருவர் ஆணைப் போலும் மற்றவர் பெண்ணைப் போலும், அதாவது ஒருவர் தன் பாலினத்தைப் போலும், மற்றவர் அடுத்த பாலினத்தைப் போலும், தன்னை அறியாமலே நடந்துகொள்வது இயல்பான காரியம்தான். அந்த வகையில் அவர்களுக்கு இடையில், கணவன் மனைவிக்கு இடையில் நிகழும் அத்தனை சாதாரணப் பிரச்சினைகளும் நிகழ வாய்ப்பிருக்கிறது. தாங்கள் வாழும் சமூகத்தில், மற்ற பாலினத்தவரோடு பழக வேண்டிய, அவர்களுடன் நல்லிணக்கமாக வாழ வேண்டிய சூழல் இருக்கிறது.

எனவே, பெண்ணியம் என்பது எந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராக இருந்தாலும் சரி, எந்தப் பாலினமாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவைப்படும் சிந்தனையாகவே இருப்பதை அறிய வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இன்னும் பறக்கலாம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று வெளியாகும் – ஆசிரியர்)

(கட்டுரையாளர் நவீனா, ஆங்கிலப் பேராசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். சமூகப் பிரச்சினைகள், பெண்ணியம், இலக்கியம் சார்ந்த படைப்புகளை எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: writernaveena@gmail.com)

[தொடரின் முதல் பகுதி]( https://minnambalam.com/k/2018/09/16/34)

[பகுதி 2]( http://minnambalam.com/k/2018/09/17/19)

[பகுதி 3](https://minnambalam.com/k/2018/09/21/20)

[பகுதி 4](https://www.minnambalam.com/k/2018/09/24/10)

[பகுதி 5](https://www.minnambalam.com/k/2018/09/28/20)

[பகுதி 6](http://www.minnambalam.com/k/2018/10/01/21)

[பகுதி 7](https://minnambalam.com/k/2018/10/05/20)

[பகுதி 8](https://www.minnambalam.com/k/2018/10/08/17)

[பகுதி 9](https://www.minnambalam.com/k/2018/10/12/13)

[பகுதி 10](https://minnambalam.com/k/2018/10/15/22)

[பகுதி 11](http://www.minnambalam.com/k/2018/10/19/6)

[பகுதி 12](https://minnambalam.com/k/2018/10/22/12)

[பகுதி 13](https://minnambalam.com/k/2018/10/26/3)

[பகுதி 14](https://minnambalam.com/k/2018/10/29/28)

[பகுதி 15]( https://minnambalam.com/k/2018/11/02/8)

[பகுதி 16](https://www.minnambalam.com/k/2018/11/05/9)

[பகுதி 17](http://www.minnambalam.com/k/2018/11/09/4)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *