சிறுமி பாலியல் கொலை: குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்!

public

பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலையான வழக்கில், குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். கைத்தறி நெசவுத்தொழில் செய்துவரும் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். இவரது மூத்த குழந்தையின் பெயர் பூங்கொடி. பரமசிவத்துக்குச் சொந்த வீடு இல்லை. அந்த ஊரிலிருந்த கதவுகள் இல்லாத பழைய குடிசை வீடொன்றில் அவரது குடும்பம் வசித்து வந்தது. கோணிச் சாக்கை கிழித்து அதில் தையல் போட்டு கதவுக்குப் பதிலாக மறைப்பு போட்டிருந்தனர் பரமசிவம் குடும்பத்தினர்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று இரவில் பரமசிவம் மகள் பூங்கொடி காணாமல் போனார். அருகிலுள்ள கரட்டுப்பகுதியில் பூங்கொடி தூக்கில் பிணமாகத் தொங்குவதாகக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தனர் அக்குடும்பத்தினர். இந்த வழக்கில் வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பூங்கொடி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையானது பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பூபதி, ஆனந்த் பாபு, ஆனந்த், பிரபாகரன், பாலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. கடந்த 19ஆம் தேதியன்று

சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி விஜயகுமாரி. இது குறித்து நேற்று மின்னம்பலத்தில் [செய்தி](https://minnambalam.com/k/2019/03/20/6) வெளியிடப்பட்டது.

இந்த வழக்கில், இன்று மாலை இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்களை வெளியிட்டார் நீதிபதி விஜயகுமாரி. “குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட கடத்தல், கற்பழிப்பு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய குற்றங்களுக்காக ஒவ்வொரு வாழ்நாள் தண்டனை என்ற வகையில், ஐந்து பேருக்கும் இரட்டை வாழ்நாள் தண்டனை விதிக்கப்படுகிறது. 120b பிரிவின் கீழ் கூட்டுச் சதி செய்தமைக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 5,000 ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறையும், 450 பிரிவின் கீழ் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன், 5,000 ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறையும், 363வது பிரிவின் கீழ் பெண்ணைக் கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறையும், 366வது பிரிவின் கீழ் கடத்தப்பட்ட பெண்ணை அப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகக் கற்பழித்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறையும், 302வது பிரிவில் பெண்ணைக் கொலை செய்ததற்காக வாழ்நாள் சிறைத் தண்டனையும், 404வது பிரிவில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இடுப்பிலிருந்த வெள்ளி அரணா கொடியைத் திருடியதற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 201வது பிரிவின் கீழ் கொலை செய்த பின்னர் தடயத்தை மறைத்தமைக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், போஸ்கோ சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு ஒரு வாழ்நாள் சிறைத் தண்டனை என மொத்தம் எட்டு குற்றங்களுக்கும் சேர்ந்து இரண்டு வாழ்நாள் தண்டனையுடன் 47 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதைக் குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *