[கர்நாடகா: வெள்ளத்தினால் 6 பேர் பலி!

public

பெருமழையின் காரணமாக, கர்நாடகாவிலுள்ள குடகு மாவட்டத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, கேரளா மற்றும் கர்நாடகாவில் பெருமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகாவிலுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் கடந்த சில வாரங்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த அளவு சுமார் இரண்டு லட்சம் கனஅடியைத் தொட்டது.

கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவிலுள்ள குடகு மாவட்டத்தில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று (ஆகஸ்ட் 18) குடகு மாவட்டத்தின் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. மழை வெள்ளத்தினால் குடகு மாவட்டத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 11 ஆயிரம் வீடுகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையானது நிவாரண உதவிகளைப் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருவதாகவும், 200 என்சிசி மாணவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார் குமாரசாமி. பெங்களூருவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இதனை அவர் உறுதி செய்துள்ளார்.

கர்நாடகாவுக்குத் தேவையான வெள்ள நிவாரண உதவிகளைச் செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

குடகு மாவட்ட நிர்வாகம் சார்பில், அங்கு தற்போது 20 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக 1,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் குடகு மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 21) வரை மழை தொடரும் என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

குடகு மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, கர்நாடகா முழுவதுமுள்ள அரசு அதிகாரிகளில் சிலர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். குடகு மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுடன் இணைக்கும் மடிகேரி – மங்களூர் சாலையானது பெருமழையினால் கடுமையாகச் சேதமுடைந்துள்ளது. அதைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பெருமழையைத் தொடர்ந்து, கர்நாடகாவிலிருந்து பாலக்காடு வழியாகக் கேரளா செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *