ஒற்றைப் பூவுக்கா இத்தனை துயரம்? – பெருமாள்முருகன்

public

கவிதை மாமருந்து – 8

நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை!

எண்ணற்ற விஷயங்களைப் பேசுவதற்கு இடம் தருகிறது கவிதை. வாசக அனுபவத்துக்கு ஏற்பப் பெருகும் பொருளின் வகைகள் பல. கவிதைக்குள் அமைந்திருக்கும் மொழித் தொழில்நுட்பமோ விண்மீன்களைப் போல ஒளிர்ந்தும் சிமிட்டியும் மங்கியும் மறைந்தும் விதவிதமான தன்மைகளைக் கொண்டிருப்பதாகும். அவற்றுள் சொல்முறை மட்டுமே பலப்பல நூல்களை எழுதும் அளவுக்கு விரிபவை. சொல்முறையின் முக்கியக் கூறு உவமை. உவமை தன்னை ஒரே தோற்றத்தில் காட்டிக்கொள்வதில்லை. அது பூணும் வேடங்கள் பல. அதனால்தான் உவமையைப் பிற்காலத்தில் அலங்காரம் அல்லது அணி என்று சுட்டினர்.

உவமையின் சிறுசிறு மாறுபாடுகளை எல்லாம் கணித்து வகைகளாகவும் வெவ்வேறு அணிகளாகவும் இலக்கணிகள் வகுத்தனர். ‘எல்லா அணிகளுக்கும் தாய் உவமை’ என்பர். பேச்சு வழக்கிலிருந்து கவிதை எடுத்துக்கொண்ட அம்சமே உவமை. இருபொருள்களை ஒப்புமைப்படுத்தித் தாம் சொல்ல வந்ததை விளக்கும் பேச்சு மொழியின் நுட்பம் கவிதையில் உவமை என்னும் மதிப்பைப் பெறுகிறது. உவமையைப் பற்றிப் பேசத் தொல்காப்பியம் ‘உவமவியல்’ என்று ஓர் இயலையே வைத்திருக்கிறது. அதன் விரிவாக்கமே பிற்கால அணி நூல்களாகிய தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலியவை.

பெரும்பாலான உவமைகள் தம்மைச் சட்டென வெளிப்படுத்திக் கொள்பவை. அவற்றை வெளிப்படுத்துபவை உவம உருபுகள். ‘போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப…’ என அவற்றைப் பட்டியலிட்டுத் தமிழ் இலக்கண நூல்கள் காட்டியிருக்கின்றன. பல காலமாக உவமையைக் காட்டிக் கொடுக்கும் உருபு ‘போல’ என்பதாகும். பிற எத்தனையோ உருபுகள் வந்து இருந்து காலாவதியாகிவிட்டன. ‘மாதிரி’ போல இன்று புதிதாய்ச் சில உருபுகளும் வந்திருக்கின்றன. எனினும் ‘போல’ மட்டும் நிலைபெற்று நின்றிருக்கிறது. எத்தனையோ கோலங்களை உவமை பூண்டுவிட்ட போதும் அதன் ஆதி அழகை இந்த உவம உருபுகள் காட்டித் தருகின்றன.

‘முரட்டுக் கோபக்காரனைப் போலச் சீறிக்கொண்டு வரும் வெயில்’ என்னும் கவிதை வரிகளைத் தமிழ் இலக்கணப்படி ஒரு கோணத்தில் விளக்கலாம். ‘வெயில்’ என்பது உவமேயம். அதாவது கவிதை விளக்க வரும் பொருள். ‘முரட்டுக் கோபக்காரன்’ உவமை. ‘போல’ என்பது உவம உருபு. உவமைக்கும் பொருளுக்குமான பொதுத்தன்மை ‘சீறிக்கொண்டு வருதல்.’ இந்த நான்கும் இயைவது உவமையணி. இந்த உவமையில் சொல்லப்படுவது கோபக்காரனை மட்டுமல்ல; அவன் முரடனும்கூட. கோபமும் முரட்டுத்தனமும் இணைந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட சீறல். அதை எதிர்கொள்வது கடினம். முரடும் கோபமும் இணைந்த கலவையை எதிர்த்துச் செய்வதற்கு ஒன்றுமில்லை. வெயிலின் உக்கிரமும் அந்தச் சீறலைப் போலத்தான். அதை எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும்?

கவிதையில் உவமையையும் பொருளையும் ஒப்புமைப்படுத்திக் காட்டும் செயலைச் செய்யும் உவம உருபு மறைந்து வரலாம். அதே போலப் பொதுத்தன்மையும் மறைந்து வரலாம். மரபில் பொதுத்தன்மை மறைந்திருப்பதே பெரும்பான்மை. நவீன கவிதையில் பொதுத்தன்மையை வெளிப்படச் சொல்லுதலே மிகுதி. அதற்குக் காரணம் உண்டு. உவமைக்கும் பொருளுக்கும் பல பொதுத்தன்மைகள் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றைக் கவிஞர் சுட்ட விரும்பும்போது பொதுத்தன்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. பழகிய உவமை என்றால் பொதுத்தன்மை புரிவதில் சிக்கல் இருக்காது. ‘புலி போலப் பாய்ந்தான்’ என்றால் ‘வேகம்’ என்னும் பொதுத்தன்மை வெளிப்படை. அதை விளக்க வேண்டியதில்லை. நவீன கவிதையில் இன்றைய வாழ்வின் பல்வேறு அம்சங்களிலிருந்து புதுப்புது உவமைகள் வந்து சேர்வதால் பொதுத்தன்மையை விளக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

நவீன கவிதை உவமை உட்பட எல்லாவித அலங்காரங்களைத் துறந்துவிட்ட காலம் என்று இருபத்தியோராம் நூற்றாண்டைச் சொல்லலாம் என எண்ணும்போது, இல்லை இல்லை, அப்படி எல்லாம் எளிதாக முடிவு செய்துவிட வேண்டாம் என வந்து நிற்கிறது ஒரு கவிதைத் தொகுப்பு. அது சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’ (புது எழுத்து வெளியீடு, 2014). மேற்கண்ட உவமை இத்தொகுப்புக் கவிதையிலிருந்து எடுக்கப்பட்டதுதான். இத்தொகுப்பை வாசித்தபோது என்னை முதலில் ஈர்த்த விஷயம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உவமைகள். உவமை பற்றிய பல்வேறு நினைவுகளையும் எண்ணங்களையும் உருவாக்கியது இத்தொகுப்பு.

**விறைத்து வீங்கிய புன்னகை**

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜாதா செல்வராஜ். இவர் தற்போது பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். பெங்களூரில் வசிப்பு. இதுதான் இவரது முதல் தொகுப்பு. நவீன கவிதை இன்று உதற முயலும் பல கூறுகளை மிகவும் வலிமையாகப் பயன்படுத்தி இருப்பது இவர் கவிதைகளின் முதல் தனித்தன்மை. ஏராளமான காட்சிப் படிமங்களையும் உவமைகளையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. சொற்செறிவு பெரிதும் பேணப்பட்டிருக்கிறது. ‘வெம்மை சமைத்த உதடுகள்’, ‘விறைத்து வீங்கிய உன் புன்னகை’ போன்ற சொற்சேர்க்கைகள் விரவிக் கிடக்கின்றன. உணர்ச்சித் ததும்பல் எங்கெங்கும். முன்னிலையை நோக்கிப் பேசும் சொல்முறை. இவையெல்லாம் கூடிக் கூர்மையான பெண்மொழி துள்ள எழுதப்பட்ட கவிதைகள் இவை. தன் சுயத்தை உணர்ந்து அதைப் பேண முயலும் பெண்மனம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் இக்கவிதைகளில் பேசப்படுகின்றன. அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் பரிமாணங்களை வாழ்வனுபவத்திற்குள் இருந்து பேசுபவை இவை. எல்லைகளைத் தகர்க்க முன்னும் மனம் அவற்றுக்குள் கிடந்து படும் துயர்ப்பாடுகளை உரக்கச் சொல்லும் வன்மைக் குரலின் வெளிப்பாடு இவை.

எண்ணங்களின் வேகமும் இயலாமையின் அலைக்கழிப்பும் இணைந்த மனத்துக்குத் தம் இம்சைகளை எடுத்துச் சொல்ல உவமை நன்றாகப் பயன்படுகிறது போலும். இத்தொகுப்பில் உவமைகளின் அடுக்கு என்று சொல்லத்தக்க ஒரு கவிதையைப் பார்க்கலாம்.

**அன்பின் தீக்கொடி**

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்

விம்மி வலித்துக் கசிகிறது எனதன்பு – நீயோ

அதனைக் கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்

வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி

ஓயாமல் அலைகின்றேன் – நீயோ

மனப்பிறழ்வுக்கான மருந்தொன்றைச் சிபாரிசு செய்கிறாய்

இயந்திரத்திற்குச் சிக்கிய செங்கரும்பாய்

வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு

புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென

உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு.

அன்பையும் மென்மையையும் இணைத்துப் பார்ப்பதே வழக்கம். ஆனால் புறக்கணிக்கப்படும்போது அன்பும் வன்மையாக வெளிப்படும். தன்மீது கவனம் கோரும் எதுவும் அத்தகைய வழிமுறையைத்தான் தேர்ந்தெடுக்கும். இக்கவிதையில் அன்பு தீயின் வடிவம் எடுக்கிறது. அது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் தீக்கொடியைப் பறக்க விடுகிறது. வேகமாகவும் வெகுதூரத்துக்கும் பரவித் தன்னைக் காட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது தீ. இங்கே அன்பின் தீக்கொடி. கவிதைத் தலைப்பிலேயே அதிர்ந்து நிற்க நேரிடுகிறது.

அடுத்துக் கவிதை தொடங்குவது ஓர் உவமையில்தான். ஒரு காட்சியே உவமையாகிறது. அந்தக் காட்சி இன்னோர் அதிர்ச்சி. ‘மழலை கைவிட்ட முலைகள்’ என்றிருந்தால் அதிர்ச்சி இல்லை. மரணித்த மழலை கைவிட்ட முலைகள் இவை. மழலை மரணித்தது பெருந்துக்கம். பாலூட்டும் மழலை அது. ஏன் இதை உவமையாக்குகிறார்? அம்முலைகள் பால்கட்டினாலும் மரணத் துயராலும் விம்மி வலித்துக் கசிவன. அப்படித்தான் இந்த அன்பும் விம்மி வலித்துக் கசிகிறது. யாரை நோக்கிக் கசிகிறதோ அந்த ‘நீ’ அன்பின் பாலைக் கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறது. இந்த அன்பு படும் பாட்டைப் புரிந்துகொள்ளவில்லை. விம்மலைத் தணிக்கவும் வலியைப் போக்கவும் சிறிய முயற்சிகூட இல்லை. கசியும் அன்பைக் கழிவறையில் பீய்ச்சியடிக்க வேண்டியிருக்கிறது. இந்த உவமையிலும் பொதுத்தன்மை ‘விம்மி வலித்துக் கசிகிறது’ என விரிவாகச் சொல்லப்படுகிறது. ‘ஆய்’ என்பது இந்தக் காலத்துப் புதிய உவம உருபு.

கவிதையின் அடுத்த பகுதியில் உவமை நேரடியாக இல்லை. ‘வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி ஓயாமல் அலைகின்றேன்’ என வருகிறது. ‘வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று’ என்னும் திருக்குறள் உவமையை நினைவுபடுத்துகிறது இது. ‘வறண்ட பாலையில் ஒற்றை மலர் தேடி அலைவது போல்’ என்பது உவமையின் வடிவம். ஆனால் இங்கே ‘வறண்ட உன் பாலை’ என உள்ளம் பாலையாக உருவகம் ஆகிறது. உருவகமும் உவமையின் இன்னொரு வடிவம்தான். வறண்ட பாலை எனத் தெரிந்தும் இந்த அன்பு பாலையிலும் எங்கேனும் ஓர் ஒற்றை மலர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. பூந்தோட்டத்தை இந்த அன்பு கேட்கவில்லை. ஒரே ஒரு மலர். அவ்வளவுதான். போதும் இந்த அன்புக்கு. ஆனால், எதிர்கொள்ளும் ‘நீ’ இதை மனப்பிறழ்வு எனச் சொல்லி அதற்கு மருந்தொன்றைப் பரிந்துரை செய்கிறது.

தொடர்ந்து இன்னோர் உவமை. ‘இயந்திரத்திற்குச் சிக்கிய செங்கரும்பாய் வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு.’ ‘ஆலையிட்ட செங்கரும்பு’ என்பது மிகப் பழைய உவமை. எனினும் கவிதை அதை இயந்திரத்திற்குச் சிக்கிய செங்கரும்பு என நவீனப்படுத்துகிறது. கரும்புச் சாறு பிழியும் எந்திரத்தை இன்றைக்கு எங்கும் காண்கிறோம். அதில் நசுங்குண்டு சாற்றை இழந்து சக்கையாக வெளிவரும் கரும்பு நமக்குப் பழகிய காட்சிதான். கவிதையிலேயே ‘வெம்மையில் நசுங்கி வழிதல்’ எனப் பொதுத்தன்மையை விளக்குவதும் நடக்கிறது. தகிக்கும் வெம்மையில் நசுங்கி வழியும் இரவு என்னும் காட்சிப் படிமமும் இதில் வருகிறது. எத்தனை வகையான எத்தனங்கள் செய்தும் சற்றும் பொருட்படுத்தப்படாத அன்புக்குக் கிடைப்பது வெம்மையில் நசுங்கி வழியும் இரவுதான்.

கவிதையின் கடைசிப் பகுதியும் ஓர் உவமையே. ‘புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு’ என்பது முடிவு. வெறும் நெற்கதிர் அல்ல; முதிர்ந்த நெற்கதிர்; புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிர். கைக்கு வந்து சேரும் நேரத்தில் ஏற்பட்ட சிதைவு. பல்லாண்டு உழைப்பை ஏதுமில்லாமல் ஆக்கிய சிதைவு இது. இதுவும் ஒரு கொடூரக் காட்சிதான். சமீபத்தில் ஏற்பட்ட கஜாப் புயலில் பயிர்கள் சிதைந்து கிடக்கும் காட்சிகளைக் கண்டோம். இந்த உவமை அப்படி ஒரு காட்சியை நினைவூட்டுகிறது. ‘உதிர்தல்’ பொதுத்தன்மை. ‘என’ என்பது இதில் பயன்படுத்தப்படும் உவம உருபு. அன்பிற்கு நேரும் புறக்கணிப்பு என்பது புயல் சிதைக்கும் முதிர்ந்த நெற்கதிரைப் போலத் தன் இருப்பையே சிதைப்பதுதான் என்கிறது கவிதை.

சுஜாதா செல்வராஜ் எழுதியுள்ள இக்கவிதைகளில் பலவிடங்களில் இருப்பு பேசப்படுகிறது. ‘சிறகு உதிர்ந்த பட்டாம்பூச்சியெனப் பதறித் தவித்து அலைகிறது எனதிந்த இருப்பு’ என்றும் ‘போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட குட்டி நாயினைப் போல் அஞ்சி அலைகிறது எனது இருப்பு’ என்றும் வரும் இரண்டு இடங்களிலும் இக்கவிதையில் வருவது போல அதிர்ச்சி ஊட்டும் காட்சி உவமைகள். சிறகு உதிர்ந்த பட்டாம்பூச்சி, போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கிக்கொண்ட குட்டி நாய் ஆகியவை பதற வைப்பவை. அன்பை உணர்ந்துகொள்ளாத ‘நீ’யை நோக்கித் தன் நிலையை விவரிக்க இவை வலிமையான உவமைகள்.

கவிதையை எவ்வகைக் காதலுக்கும் பொருத்தலாம். காதலின் பின்னான ஊடல்களுக்கும் பொருத்தலாம். திருமண வாழ்வுக்கும் அதில் நேரும் சங்கடங்களுக்கும் பொருத்தலாம். காமத்தின் நுட்பங்களுக்கும் பொருத்தலாம். இவை எல்லாவற்றையும் கடந்து அன்பு புறக்கணிக்கப்படும் வாழ்வின் எந்தக் கணத்துக்கும் பொருத்தலாம். இத்தனை வலிமையான அன்பு ஏன் புறக்கணிக்கப்படுகிறது? இந்த அன்புக்கு என்னதான் பிரச்சினை? புறக்கணிக்கப்பட்டாலும் இந்த அன்பு ஏற்பை நோக்கி ஏன் தன் தீக்கொடியைப் பறக்க விட்டுக்கொண்டே இருக்கிறது? ஒற்றைப் பூவைப் பெற்றதும் இந்த அன்பு சமாதானமாகிவிடுமா? ஒற்றைப் பூவுக்கா இத்தனை துயரம் என ஏராளமான கேள்விகளை இந்தக் கவிதை வைத்திருக்கிறது.

அன்பின் பெருக்கு ஒருபோதும் மென்மையானதல்ல. அது தன்னை நிலைநாட்டிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் இயல்புடையது. இந்தப் பெருகும் அன்புக்காகப் பரிதாபப்படும் அதேசமயம் அதன் வேகம் கண்டு அச்சமும் உருவாகிறது. இந்த அன்பின் நோக்கம் இரண்டுமாகத்தான் இருக்கக்கூடும். இரக்கம், பரிதாபம், அதிர்ச்சி, அச்சம் என எல்லாவகை உணர்வுகளையும் இக்கவிதை கிளர்த்தக் காரணம் இதில் கையாளப்படும் வலிமை வாய்ந்த உவமைகள்தான்.

*(**கட்டுரையாளர் : பெருமாள்முருகன்** – எழுத்தாளர், கவிஞர், விமர்சகர். பத்து நாவல்களை எழுதியிருக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் ஐந்து கவிதைத் தொகுப்புகளும் வந்துள்ளன. மொழி, இலக்கியம் ஆகியவை சார்ந்த கட்டுரைத் தொகுப்புகள் / தொகை நூல்கள் பத்துக்கும் மேல் வெளியாகியுள்ளன. கொங்கு வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்தளித்திருக்கிறார். இவருடைய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. ஆத்தூர் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரியும் இவர் இலக்கிய ஆய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவர் படைப்பாக்கம், விமர்சனம், ஆய்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: murugutcd@gmail.com)*

**முந்தைய பகுதிகள் :**

**[உனக்கு நீயேதான்!](https://minnambalam.com/k/2018/08/15/42)**

**[கவிதைப் பூனை!](https://minnambalam.com/k/2018/09/01/25)**

**[வெறுங்கைக்குள் அடங்கும் அனுபவம்!](https://minnambalam.com/k/2018/09/15/16)**

**[புதையுண்ட பெருவாழ்வு!](https://minnambalam.com/k/2018/10/01/27)**

**[கைவிடப்படுவதல் என்னும் வரம்](https://minnambalam.com/k/2018/10/15/18)**

**[கல்லால் அடித்த குழந்தை!](https://minnambalam.com/k/2018/11/01/14)**

**[நட்பின் தேவ வேடம்](https://minnambalam.com/k/2018/12/01/25)**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *