என்.எல்.சி. பெயர் மாற்றத்தின் நோக்கம் என்ன?-பாவெல்

public

என்.எல்.சி-க்கு நெய்வேலி மக்கள் செய்த தியாகங்கள் மறைக்க முற்படுகிறதா மத்திய அரசு! பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் காரணம்காட்டி தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு சவலாக இருந்துவரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன். ஏனென்றால், ஆண்டுதோறும் 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டித் தருவதால், இதை தனியாரிடம் தள்ளமுடியாமல் முழிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இப்படி ஒரு லாபத்தில் இயங்குகிற பெருமைமிக்க ஒரு பொதுத்துறை நிறுவனம் நமது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியின் பெயரிலே இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்.

இந்நிலையில், மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தின் பெயரை மாற்றி, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் என, மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு, பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருபக்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். மறுபக்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாக நிலம் கொடுத்த விவசாயிகளும், தொழிலாளர்களும் இந்தப் பெயர் மாற்றத்தைக் கேள்விப்பட்டு கொதித்துப்போய் உள்ளனர்.

அவர்களின் கோபத்துக்குக் காரணம் என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த நெய்வேலி மக்கள், இதை ஏதோ வெறும் பெயர் மாற்றமாக மட்டும் பார்க்கவில்லை. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து தாங்கள் அளித்த நிலம், உழைப்பு, தியாகம் எல்லாம் மறைத்து நிறுவனத்தைச் சுரண்டி இழுத்து மூடுவதற்கான தொடக்கம் என்றே அச்சப்படுகிறார்கள்.

இது வெறும் அச்சமல்ல என்றும், உண்மை நிலவரம் என்று உறுதிப்படுத்தும்விதமாக அதற்கான காரணங்களைச் சொல்கிறார்கள்.

முதலில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. நிறுவனத்தில் வடமாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. நகரத்தில் தமிழர்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது. வடமாநிலத்தவர்களின் நடமாட்டம்தான் அதிகமாக இருக்கிறது. இதெல்லாம் இங்குள்ள தொழிற்சங்கங்கள் மூலமாக எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்களுக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இதுகுறித்து எதுவும் பேசுவதில்லை என்று தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறார்கள்.

நெய்வேலி மக்கள் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து, இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு ஒரு மாநில மக்கள் ஏக உரிமை கொண்டாடுவது மற்றவர்களுக்கு வேண்டுமானால் பிராந்திய உணர்வுபோலத் தோன்றலாம். யதார்த்தத்தில் அந்த அளவுக்கு, என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியதிலிருந்து இப்போது ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவது வரை, என்.எல்.சி. தொழிலாளர்களும், அப்பகுதி மக்களும் செய்துள்ள தியாகங்களைப் பட்டியலிட்டு அதன் வரலாற்றைச் சொல்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1935ம் ஆண்டு நெய்வேலியில் இருந்த விவசாயி ஜம்புலிங்கம் என்பவர் பானத்துக்காக கிணறு வெட்டும்போது, இங்கு பழுப்பு நிலக்கரி இருப்பதைக் கண்டுபிடித்து அரசுக்குத் தெரிவித்தார். நிலக்கரியைக் கண்டுபிடித்ததோடு மட்டுமில்லாமல் சுரங்கம் வெட்டி நிலக்கரி எடுத்தவர்களும் நெய்வேலிப் பகுதி விவசாயிகள்தான். நிலக்கரி எடுப்பதற்காக அடிமாட்டு விலைக்கு விளை நிலங்களை கொடுத்ததும் மண்ணின் மைந்தர்களான விவசாயிகள்தான்.

1956ம் ஆண்டு இந்திய அரசு நிலக்கரி எடுத்து, மின் உற்பத்தி செய்ய முன்வந்து வேலைகளைத் தொடங்கியது. அப்போதும் சுரங்கம் வெட்டுவதிலிருந்து கட்டுமானப் பணிகள் வரை நெய்வேலி மக்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்தார்கள். வடமாநிலத்தவர்கள் யாரும் வந்து செய்யவில்லை வந்தவர்களும் பயந்து ஓடிப் போனார்கள்.

அந்த ஆரம்பகட்ட பணிகளின்போது விபத்தில் பலபேர் பலியானார்கள். பலர் ஊனமானார்கள். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, சொற்பக் கூலிக்கு உடலில் உப்பு பூக்க உழைத்தவர்கள் நெய்வேலி மக்கள்தான். அப்போதெல்லாம் தொழிலாளர்களுக்கு இன்றிருக்கும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை, பாதுகாப்பு சட்டமும் இல்லை. அடிப்படையான மருத்துவ வசதிகள் இல்லாததால் கொள்ளை நோய் பரவியது. இதனால், பல விவசாயக் குடும்பங்கள் பலியானார்கள். மனிதர்கள் மட்டுமா? அவர்கள் வளர்த்த ஆடு, மாடுகளும்தான் பலியாகி இருக்கின்றன. இப்படி நெய்வேலி மக்கள் என்.எல்.சி-க்கு செய்திருக்கும் தியாகங்களை கண்ணீரோடு அடுக்கிச் செல்கிறார்கள்.

இத்தனை தியாகங்களுக்குப் பிறகு 1962ல் நெய்வேலியில் முதல் தெர்மல், ரஷ்யா தொழில்நுட்பத்துடன் மின் உற்பத்தி துவங்கப்பட்டது, இந்தத் தெர்மலில் உற்பத்தியாகும் முழு மின்சாரம் தமிழகத்துக்கு மட்டுமே. முதல் தெர்மல் ஆயுட் காலம் 2009 ஆண்டுடன் முடிந்துவிட்டது. ஆனாலும், ஆபத்தைப் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் இன்னும் அதை இயக்கி வருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக பெரிய அளவில் விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டுவிட்டன. அதற்கு மாற்றுவழி காண இதுவரை ஒரு திட்டமும் இல்லை. இந்த அலட்சியத்துக்குக் காரணம் இந்த நிறுவனத்தின் மின்சார உற்பத்தி தமிழகத்துக்கு மட்டுமே பயன்படுவதால்தானோ என்று ஐயம் கொள்கிறார்கள் என்.எல்.சி தொழிலாளர்கள்.

இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் லாபத்தை வடமாநிலங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டமுடியாமல் இருந்து வருகிறார்கள். என்.எல்.சி-யின் லாபத்தை ராஜஸ்தான் பார்சிங்காரில் 5 ஆயிரம் கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசத்தில் NUPPL ஆயிரம் மெகாவாட் உற்பத்திசெய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்குவங்கத்தில் தாமோதர் பள்ளத்தாக்கில் இயக்கத்தில் உள்ள பிளான்ட் வாங்க 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. என்.எல்.சி. நிர்வாகம் தூத்துக்குடியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததில் நல்ல லாபம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொல்லலாம் என்று தொழிலாளர்கள் லாபக் கணக்கை நீட்டுகிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால், என்.எல்.சி. இரண்டாவது தெர்மல் விரிவாக்கத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், அதன் முழு உற்பத்தி 500 மெகாவாட் மின் உற்பத்தி இதுவரை எட்டப்படவில்லை. 120, 180 மெகாவாட் எட்டினாலேயே உயர் அழுத்தம் ஏற்பட்டு நின்றுவிடுகிறது. அதை சும்மா பெருமைக்கு இயக்கி வருகிறார்கள். இந்தக் கோளாறுக்குக் காரணம், முழு அளவு எட்டாமல் முழு மின் உற்பத்தியை செய்ய முடியாது என்கிறார்கள் தொழில்நுட்ப பொறியாளர்கள். இதற்குக் காரணம் நிறுவனத்தின் நிர்வாகக் கோளாறு, ஊழல், மெத்தனம், அனைத்தும் கலந்து உள்ளது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் உடலை மட்டும் விட்டுட்டு உடலில் உள்ள உறுப்புகளை அனைத்தும் உருவிக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படி, ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சத்தியத்துக்கு ஓடுவதுபோல, என்.எல்.சி. லாபத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது, என்.எல்.சி. நிறுவனத்தில் வரும் லாபம், இதற்குமுன் வந்த லாபம் அனைத்தின் ஊற்றுகளும் துடைக்கப்பட்டுவிட்டது. சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதற்கு எல்லாம் தமிழக தொழிலாளர்கள் இருந்தால்தான் எதிர்ப்பு வருகிறது என்று, என்.எல்.சி-க்கு வேலைசெய்ய தமிழகத்தில் ஆள் எடுக்காமல் டெல்லி, மும்பை, கொல்கத்தா பகுதியிலிருந்து ஐ.ஐ.டி.யில் படித்த ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று நிர்வாகத்தின் ஓர வஞ்சனையையும் கூறுகிறார்கள் நெய்வேலி மக்கள்.

நிலக்கரி எடுப்பதற்காக 50 ஆயிரம் ஏக்கர் நிலம் நெய்வேலி விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. இப்படி, நிறுவனத்துக்காக விவசாயிகள் நிலங்களை இழந்தது மட்டுமல்ல, தற்போது, 450 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதால், நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு சுற்றுவட்டாரத்தில் விவசாயமே செய்ய முடியாமல் போனது. இப்படி, தங்கள் எதிர்காலத்தையே இழந்து நிற்கும் நெய்வேலி விவசாயிகள், இழந்தது ஏராளம். நிறுவனம் மூலமாக பெற்றதோ சொல்லக்கூடிய அளவுக்கு ஒன்றுமில்லை.

இப்படி நிறுவனத்துக்காக நெய்வேலி மக்கள் செய்த தியாகங்களும், நிறுவனத்தின் கடந்தகால சாதனைகளும், தற்போதைய அவலநிலையும் இருக்க மத்திய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பெயரை மாற்ற முன்வந்திருக்கிறது. இந்தச் செயல் நெய்வேலி மக்களின் தியாகத்துக்கு அடையாளமாக இருக்கிற நெய்வேலி என்ற பெயரை மட்டும் மாற்றவில்லை; நிறுவனத்தையே மூடிவிடுவதற்கான தொடக்கம்தான் என்ற எண்ணம் வலுத்திருக்கிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *