~அரசுக்கு மக்களைப் பற்றிய கவலையில்லை: ஸ்டாலின்!

public

‘டாஸ்மாக் கடைகளை மாற்றுவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு, மக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மே 3ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “கொளத்தூர் தொகுதியில் 99 சதவிகித இடங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருவதால், இந்த பிரச்னையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலையிட்டு உடனடியாக முழுக் கவனம் செலுத்தி குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோதும், மா.சுப்ரமணியன் இருந்தபோதும் குடிநீர் பிரச்னைகள் வந்தால் அதற்கென தனி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உடனுக்குடன் அந்த பிரச்னைகளைத் தீர்த்து வைத்துள்ளோம். ஆனால், தற்போதைய அரசு ஒருங்கிணைப்பு குழுக்களை அமைப்பதில்லை. ஒருங்கிணைப்பு குழுக்கள் இருந்திருந்தால், குடிநீர் பிரச்னையைக் கண்டிப்பாகத் தீர்த்திருக்க முடியும். எனவே, குழுக்கள் அமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது, டாஸ்மாக் வருவாய் குறைவாக இருப்பதால், அதை உயர்த்த ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததற்குப் பிறகு, மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளை நகராட்சி, மாநகராட்சி சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதே தவிர, மக்களின் பிரச்னையில் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.

மே தினப் பொதுக்கூட்டத்தில் பேசிய பன்னீர், ‘ஆட்சியிலிருந்தவரை விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்காத திமுக, தற்போது போராட்டம் நடத்துவதை மக்கள் நம்ப மாட்டார்கள்’ என்றும், ‘முன்பெல்லாம் என்னை விமர்சனம் செய்யாத ஸ்டாலின் தற்போது மட்டும் ஏன் விமர்சிக்கிறார்?’ என்றும் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தற்காலிக முதல்வராகவும், ஜெயலலிதா இறந்த பிறகு இரண்டு மாதங்கள் முதல்வராகவும் பதவி வகித்த பன்னீர், அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரவில்லை. தன்னுடைய பதவி போன பின்புதான் நீதி விசாரணை வேண்டுமென போராடுகிறார். எனவே அவரின் கருத்துக்குப் பதில்கூற வேண்டிய அவசியமில்லை. மேலும் சட்டப்பேரவையில் பன்னீர் நிதியமைச்சராக இருந்தபோது அவரின் துறை சார்ந்த பிரச்னைகளில் எவ்வாறெல்லாம் விமர்சித்துள்ளேன் என்பதை பேரவைக் குறிப்புகளை எடுத்துப் பார்த்தாலே தெரியும்” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *